உத்தரவாதம் கொடுக்க முடியாது… ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக சம்பவம் இருக்கு – ரோகித் சர்மா பளீர்

உலக கோப்பை தொடரின் அடுத்த லீக் போட்டியில் இந்தியஅணி நியூசிலாந்து அணியை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. தர்மசாலாவில் இப்போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளும் நடப்பு உலக கோப்பை தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைப்பார்கள். இப்போதைக்கு நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ரன்ரேட் அடிப்படையில் இந்திய அணி பின்தங்கியுள்ளது.

ஐசிசி தொடர்களை பொறுத்தவரை இந்திய அணி 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து அணியை வீழ்த்தியதில்லை. இதுவரை உலக கோப்பை போட்டிகளில் மட்டும் இரு அணிகளும் 9 முறை நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. அதில் நியூசிலாந்து அணி 5 முறையும், இந்தியா மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு போட்டியில் முடிவு இல்லை. இந்திய அணி, ஐசிசி தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆவதால், இம்முறை அந்த சோகத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்டார். 

அவரின் கேள்விக்கு ரோகித் பதில் அளிக்கும்போது, ஐசிசி தொடர்களில் நாம் நியூசிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடவில்லை என்பது உண்மை தான். அதேநேரத்தில் நாமும் நல்ல கிரிக்கெட்டை தான் விளையாடிக் கொண்டிருக்கிறோம். ரிசல்ட் நம்முடைய கையில் இல்லை என தெரிவித்தார்.  இம்முறையாவது அந்த சோகத்துக்கு முடிவு கட்டப்படுமா? என்று சுப்மான் கில் மீண்டும் கேட்க, களத்தில் ஒரு அணியாக நாம் நம்மால் முடிந்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். அது தான் இப்போதைக்கு நம் கையில் இருப்பது என்று ரோகித் சர்மா பதில் அளித்தார். நல்ல கிரிக்கெட்டை விளையாடுவோம், அதனால் வரும் முடிவு நம் கையில் இல்லை என்றும் பதில் அளித்தார். உத்தரவாதம் கொடுக்க முடியாது, தர்மசாலாவில் இந்த கேள்விக்கான விடை கிடைக்கும் என்றும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். 

2019 ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அப்போட்டியில் தோல்வி கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோரை வெகுவாக பாதித்தது. அதற்கு நியூசிலாந்து அணிக்கு சரியான பதிலடி கொடுக்கும் வாய்ப்பு இப்போது இந்திய அணிக்கு சொந்த மண்ணிலேயே கிடைத்திருக்கிறது. மென் இன் ப்ளூ என்ன செய்யப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.