குப்பை தொட்டியில் வீசிய லாட்டரி சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசு; அதிர்ஷ்டக்காரரான ஆட்டோ டிரைவர்

ஆட்டோ டிரைவர்

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் மூலவட்டம் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 53). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி பிந்து, மகள் சினேகா மற்றும் தாயார் சரசம்மா. சுனில் குமார், லாட்டரி சீட்டுகள் வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில அரசின் 50:50 என்ற லாட்டரி குலுக்கல் பரிசு திட்டத்தில் லாட்டரி சீட்டு ஒன்றை சுனில் குமார் வாங்கியுள்ளார். இதற்கான முதல் பரிசு ரூ.1 கோடியாகும். தொடர்ந்து கடந்த 18-ந் தேதி லாட்டரி சீட்டு குலுக்கல் நடத்தப்பட்டு மறுநாள் பரிசு பெற்றவர்கள் விவரங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கிடையே தனக்கு பெரியளவில் பரிசு தொகை லாட்டரியில் கிடைக்காது என கருதிய சுனில்குமார், தான் வாங்கியிருந்த லாட்டரி சீட்டை வீட்டில் உள்ள குப்பை தொட்டியில் வீசிவிட்டு வழக்கமான வேலையை கவனிக்க தொடங்கிவிட்டார்.

ரூ.1 கோடி பரிசு

ஆனாலும் அதன்பின்னர் லாட்டரி சீட்டு பற்றிய எண்ணம் அவரது மனதின் ஓரத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் தான் குப்பை தொட்டியில் வீசிய லாட்டரி சீட்டை குப்பை கழிவுகளை கிளறி ஒருவழியாக தேடி கண்டுபிடித்து எடுத்தார். பின்னர் அந்த லாட்டரி சீட்டில் உள்ள நம்பருக்கு பரிசுத்தொகை விழுந்துள்ளதா என்று பார்த்தார். அப்போது அவரே எதிர்பாராத வகையில் முதல் பரிசான ரூ.1 கோடி அவர் வாங்கிய லாட்டரி சீட்டின் நம்பருக்கு விழுந்தது தெரியவந்தது.

இதை அறிந்ததும் சுனில்குமார் அளவில்லா மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார். குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர் அந்த பரிசுத்தொகையை பெற வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும் இந்த ரூ.1 கோடியை வைத்து அடமானம் வைத்த வீட்டை மீட்டு, புதிய வீடு கட்ட உள்ளதாகவும், வாங்கிய கடன் அனைத்தையும் அடைக்க உள்ளதாகவும், தனக்கு தெய்வம் பரிசை வழங்கி உள்ளது என்றும் நெகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.