இந்தியா – நியூசிலாந்து அணிகள் நடப்பு உலக கோப்பை தொடரில் முதன்முறையாக தர்மசாலாவில் சந்திக்கின்றன. 2019 ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை அரையிறுதியில் வாங்கிய அடிக்கு, பதிலடி கொடுக்க காத்திருக்கும் அடிப்பட்ட புலியாக இந்திய அணி இப்போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது. இரண்டு அணிக்கும் இதுவரை விளையாடி இருக்கும் 4 உலக கோப்பை போட்டிகளிலும் வெற்றி சரிசம பலத்துடன், ஒருவரையொருவர் சந்திக்கின்றனர். இப்படியான சூழலில் மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
தர்மசாலா பிட்ச் ரிப்போர்ட்
இமாச்சலப் பிரதேசத்தில் பனிமலை கூட்டத்துக்கு நடுவே இருக்கும் தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் இன்று 20 விழுக்காடு மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே நடைபெற்ற தென்னாப்பிரிக்கா – நெதர்லாந்து போட்டி மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இப்போட்டியில் சேஸிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியை தோல்வியை தழுவியது. இருப்பினும் பிட்ச் இரண்டாவது பேட்டிங்கிற்கு அதிக சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மாலை நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் இது பந்துவீச்சாளர்களுக்கு சிரமமாக இருக்கும். இது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும். இதுவரை மொத்தம் ஏழு ஒருநாள் போட்டிகள் நடைபெற்று இருக்கின்றன. அதில் முதலில் விளையாடிய அணி 3 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் விளையாடிய அணி நான்கு முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன. வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு என சரி சமமாக உதவும் மைதானம் தர்மசாலா.
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ரன்கள்
ஒருநாள் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 231 ரன்களும், இரண்டாவது பேட்டிங்கில் 199 ரன்களும் இந்த மைதானத்தில் சராசரியாக எடுக்கலாம். வங்கதேச அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 394 ரன்கள் எடுத்தது இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி எடுத்த 112 ரன்கள் குறைந்தபட்ச ஸ்கோர். இந்திய அணிக்கு எதிராக இந்த மைதானத்தில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் அதிகபட்சமாக சேஸிங் செய்திருக்கிறது. 245 ரன்களை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நெதர்லாந்து அணி கட்டுப்படுத்தியிருக்கிறது.
இந்திய வீரர்களின் ரெக்கார்டு
ஷுப்மான் கில் நியூசிலாந்துக்கு எதிராக தனது கடைசி ஆறு இன்னிங்ஸ்களில் 50, 45*, 13, 208, 40* மற்றும் 112 ரன்களை எடுத்துள்ளார். இதனால் இன்றைய போட்டியிலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டத்தை அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். அதேபோல், ரோகித் சர்மா இந்த ஆண்டு பவர்பிளேயில் 32 சிக்சர்களை அடித்துள்ளார். இந்த ஆண்டில் பவர் பிளேவில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ஐசிசி தொடர்களில் 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து இந்தியா – நியூசிலாந்து அணிகள் இதுவரை 9 போட்டிகளில் மோதியிருக்கின்றன. இதில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது.