ரபா, காசா பகுதியை தரை வழியே முற்றுகையிடுவதற்கு முன்னதாக, போர்க் களத்தை தங்களுக்கு சாதகமாக தயார் செய்யும் நோக்கத்துடன், வடக்கு காசா மீது பல மணி நேரங்கள் தொடர்ச்சியாக தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்தியது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆறு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து வரும் போர் காரணமாக, காசா பகுதியில் எரிபொருள் தீர்ந்து போகும் தருவாயில் உள்ளது. இதனால், பெரும்பாலான மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, நிவாரண பொருட்களை வழங்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில், 24 மணி நேரத்தில் 750க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காசாவில் உள்ள அல் ஜசீரா செய்தி ஊடகத்தின் மூத்த செய்தியாளர் வேய்ல் தாதோ என்பவரின் மனைவி, மகன், மகள் மற்றும் பேரக்குழந்தை நேற்று முன்தினம் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை மட்டுமே குறிவைத்து தாக்குவதாகவும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்துவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியதாவது:
வடக்கு காசா நோக்கி தரைவழியே முன்னேற துவங்கியுள்ளோம். போர்க் களத்தை எங்களுக்கு சாதகமாக தயார் செய்வதற்காக, பயங்கரவாதிகளின் கட்டமைப்புகள், பீரங்கி எதிர்ப்பு வாகனங்களை குறிவைத்து தகர்த்து வருகிறோம்.
போரின் அடுத்த கட்டத்தை தயார் செய்வதன் ஒரு பகுதியாக இந்த வரையறுக்கப்பட்ட ஊடுருவலை செய்து வருகிறோம்.
கடந்த 24 மணி நேரத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் சுரங்க பாதைகள், ராக்கெட் லாஞ்சர்கள், ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து, 250க்கும் அதிகமான வான்வழி ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
போருக்கு காரணமா?
அமெரிக்கா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை நேற்று சந்தித்தனர். அப்போது ஜோ பைடன் கூறியதாவது:புதுடில்லியில் சமீபத்தில் நடந்த, ‘ஜி – 20’ உச்சி மாநாட்டின் போது, இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பிய நாடுகளை ரயில் மற்றும் கடல் மார்க்கமாக இணைக்கும் பொருளாதார வழித்தடம் அமைப்பது குறித்து அறிவிக்கப்பட்டது. இஸ்ரேலுக்கான பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் ஒட்டுமொத்த பிராந்திய ஒருங்கிணைப்பை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்கள் தாக்குதலை துவக்கியுள்ளனர். இந்தியா,- ஐரோப்பா இடையிலான பொருளாதார வழித்தட திட்டத்தை தடுக்கவே, இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியிருக்கலாம். ஹமாஸ் தாக்குதலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்