சிக்கபல்லாப்பூர், ஆந்திராவில் இருந்து பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்த ‘டாடா சுமோ’ கார், சிக்கபல்லாப்பூரில் நின்றிருந்த சிமென்ட் கலவை லாரி மீது மோதியதில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாப்பூர் மாவட்டத்தின் சித்ராவதி என்ற பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை ஒரு சிமென்ட் கலவை லாரி, சாலை ஓரம் நின்றிருந்தது.
காலை நேரம் என்பதால், பனிப்பொழிவு காரணமாக சாலையில் நின்றிருக்கும் வாகனங்கள் துாரத்தில் இருந்து தெரியவில்லை.
காலை 7:00 மணியளவில் ஆந்திராவில் இருந்து தொழிலாளர்களை ஏற்றி வந்த டாடா சுமோ கார், லாரி மீது வேகமாக மோதியது.
மோதிய வேகத்தில் கார் அப்பளமாக நொறுங்கியது. காரில் இருந்தவர்கள், காப்பாற்றும்படி அபய குரல் எழுப்பினர். விபத்தை பார்த்தவர்கள் ஓடி வந்து, அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கார் அப்பளமாக நொறுங்கி கிடந்ததால், மீட்பதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.
போலீசார் வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் ஒரு குழந்தை, மூன்று பெண்கள், ஒன்பது ஆண்கள் என, 13 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இறந்தவர்கள், பெங்களூரின் வெவ்வேறு பகுதிகளில் கூலி வேலை செய்து வந்தவர்கள். ஆயுத பூஜை, தசரா கொண்டாட்டத்துக்காக சொந்த ஊர் சென்று, நேற்று பெங்களூரு திரும்பி கொண்டிருந்த போது, விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.
பெனுகொண்டா, கோரண்ட்லா உட்பட ஆந்திராவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து, ஒரே காரில் 15 தொழிலாளர்களை ஏற்றி வந்துஉள்ளனர்.
‘அதிவேகமும், அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வந்ததுமே விபத்துக்கு காரணம்’ என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்