அமெரிக்காவில் மனநோயாளி நடத்திய துப்பாக்கி சூட்டில் 22 பேர் பரிதாப பலி| 22 people were tragically killed in a shooting by a psychopath in America

லுாவிஸ்டன்,அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தில் லுாவிஸ்டன் பகுதியில் உள்ள உணவகம் மற்றும் பொழுதுபோக்கு மையத்தில், மன நோயாளி நடத்திய துப்பாக்கி சூட்டில், 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து உள்ளனர்.

அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தின் லுாவிஸ்டன் பகுதியில் பல உணவகங்கள் மற்றும் ‘பவுலிங்’ எனப்படும் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் அதிகளவில் உள்ளன. இங்கு இரவு நேரங்களில் அதிகளவில் மக்கள் கூடுவர்.

பாதுகாப்பான இடம்

இங்குள்ள ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மையத்துக்குள் நேற்று முன்தினம் இரவு நுழைந்த ஒருவர், திடீரென துப்பாக்கியால் அங்கிருந்தோரை நோக்கி சரமாரியாக சுட்டார்.

பலுான் சுடும் விளையாட்டு நடப்பதாக சிலர் நினைத்தனர்.

ஆனால், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் கூக்குரலுக்குப் பின், விபரீதத்தை உணர்ந்த மக்கள், பாதுகாப்பான இடங்களில் மறைந்து கொண்டனர்.

இதற்கிடையே அந்த நபர் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில், 22 பேர் உயிரிழந்துள்ளனர்; 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த நபர் தப்பி சென்றுள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்ததும் போலீசார் அந்த இடத்துக்கு விரைந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் பதிவை ஆராய்ந்ததில், தாக்குதல் நடத்தியவர் பெயர் ராபர்ட் கார்ட், 40, என தெரியவந்தது.

இவர் ராணுவ பயிற்சி மையத்தில் பகுதிநேர ஆயுத பயிற்றுனராக இருந்தது தெரியவந்தது. சமீபத்தில் மனநல பாதிப்பு தொடர்பாக சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்து உள்ளது.

எச்சரிக்கை

தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், லுாவிஸ்டன் பகுதியில் உள்ள மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி போலீசாரும், உள்ளூர் நிர்வாகமும் அறிவுறுத்திஉள்ளன.

அந்த பகுதியில் உள்ள மற்ற உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்களும் உடனடியாக மூடப்பட்டுள்ளன.

அந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், அலுவலகங்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. அந்த நபர் மீண்டும் தாக்குதலில் ஈடுபடலாம் என, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். அனைத்து உதவிகளும் செய்வதாக உள்ளூர் நிர்வாகத்துக்கு அவர் உறுதியளித்துள்ளார்.

துப்பாக்கி கலாசாரம்

மெய்னே மாகாணத்தில் துப்பாக்கி உரிமம் பெறுவதற்கு பெரிய அளவில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. வேட்டையாடுவது இந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு பொழுதுபோக்கு என்பதால், மிக சுலபமாக துப்பாக்கிகள் கிடைக்கின்றன.

துப்பாக்கி கலாசாரம் குறித்து அமெரிக்கா முழுதும் நீண்டகாலமாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதில் எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

மெய்னே மாகாணத்தில், துப்பாக்கி பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற பலமுறை முயன்றும் தோல்விஅடைந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.