செஹோர், மத்திய பிரதேசத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக பழங்குடியின சமுதாய மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளருக்கு, 170 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் செஹோரைச் சேர்ந்த பால சாஹேப் பால்கர், அந்த பகுதியில் ‘சாய் பிரசாத்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 2012 – 2015 வரையிலான காலத்தில் நடத்தப்பட்ட நிறுவனத்தில், முதலீடு செய்யும் பணம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக தரப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதை நம்பி பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த 31 பேர், மொத்தமாக 1.40 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பின், முதலீடு செய்தவர்கள் நிதி நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, அது பூட்டப்பட்டு இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணை நடத்திய போலீசார், தலைமறைவாக இருந்த பால சாஹேபை கைது செய்தனர். இந்த வழக்கு, செஹோர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பால சாேஹப் மீதான ஏமாற்றுதல் மற்றும் மோசடி செய்தது தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த குற்றத்திற்காக அவருக்கு, 170 ஆண்டு சிறைத் தண்டனையும், 9.35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
பால சாஹேப் மற்றும் அவரின் நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்படுகிறது. முதலீட்டாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement