மும்பை, மஹாராஷ்டிராவில் மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணத்தை பதிவு செய்ய, அவரை இரண்டு மாடி ஏறி வரும்படி கட்டாயப்படுத்திய பதிவுத்துறை அதிகாரி ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
சக்கர நாற்காலி
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்தவர் விராலி. மாற்றுத்திறனாளி பெண்ணான இவர், சக்கர நாற்காலி உதவியுடன் தான் நடமாடி வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார்.
இவருக்கு கடந்த 16ம் தேதி காதல் திருமணம் நடந்தது. மும்பையின் கார் பகுதியில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்வதற்காக, கணவருடன் வந்தார்.
இந்த அலுவலகம் இரண்டாவது மாடியில் உள்ளது. அந்த கட்டடத்தில் ‘லிப்ட்’ வசதி இல்லை. சக்கர நாற்காலியில் வந்த விராலி, இரண்டாவது மாடிக்கு செல்ல வழியின்றி திகைத்தார்.
இதை தொடர்ந்து, விராலியின் உடன் வந்த நபர், பதிவுத்துறை அதிகாரி அருண் கோடேகர் என்பவரை தொடர்பு கொண்டார்.
நிலைமையை எடுத்துக்கூறி, தரை தளத்துக்கு வந்து திருமண பதிவை முடித்து வைக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்க மறுத்த அருண் கோடேகர், ‘தம்பதியின் புகைப்படம் மற்றும் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என்பதால், அவர்களை இரண்டாவது மாடிக்கு அழைத்த வந்தால் தான் பதிவு செய்ய முடியும்’ என கூறினார்.
இதையடுத்து விராலியை, அவரது கணவர் மற்றும் நண்பர்கள், சக்கர நாற்காலியுடன் இரண்டாவது மாடிக்கு துாக்கி சென்று திருமண பதிவை முடித்தனர்.
யார் பொறுப்பு?
இது குறித்து விராலி, தன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதன் விபரம்:
என் உடலில் உள்ள குறைபாட்டுக்கு இந்த அரசும், நாட்டு மக்களும் இடம் அளிக்காதது என்னை மனமுடையச் செய்துள்ளது. இந்த சம்பவத்தின் வாயிலாக, மனிதகுலத்தின் மீதான என் நம்பிக்கை தகர்ந்துவிட்டது.
இரண்டு மாடிகள் துாக்கிச் செல்ல நான் ஒன்றும் உயிரற்ற உடைமை அல்ல; உயிருள்ள மனித பிறவி. திருமண நாள் அன்று என்னை இரண்டாவது மாடிக்கு துாக்கி செல்லும் போது கை தவறி கீழே போட்டிருந்தால் யார் பொறுப்பு?
இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த பதிவை பல்வேறு தரப்பினரும் பகிர்ந்தனர். நடந்த சம்பவத்துக்கு மஹாராஷ்டிரா துணை முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ் மன்னிப்பு கோரினார்.
சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து, விராலியை இரண்டாவது மாடிக்கு வரும்படி கட்டாயப்படுத்திய பதிவுத்துறை அதிகாரி அருண் கோடேகரை, மறு அறிவிப்பு வரும் வரை ‘சஸ்பெண்ட்’ செய்து வருவாய் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்