கொச்சி:கேரளாவில் மத வழிபாட்டு கூடத்தில் நேற்று அடுத்தடுத்து மூன்று முறை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இவற்றில், இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் சிலருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது, பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு உட்பட பல புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணைக்கு விரைந்துள்ளனர்.
கேரளாவில் மார்க்., கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள எர்ணாகுளம் மாவட்டம் கலமசேரியில், ‘ஜெகோவா விட்னசஸ்’ என்ற கிறிஸ்துவப் பிரிவைச் சேர்ந்தவர்களின் மூன்று நாள் கூட்டம் நடந்தது.
கடந்த 19வது நுாற்றாண்டில் அமெரிக்காவில் உருவானது இந்தப் பிரிவு. கிறிஸ்துவ மதத்தின் ஒரு பிரிவான இதைப் பின்பற்றும், 2,000த்துக்கும் மேற்பட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பிரார்த்தனை
மூன்றாவது நாளான நேற்று காலை, இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றனர். அனைவரும் கண்களை மூடி பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, கூட்டத்துக்கு இடையே திடீரென ஒரு குண்டு வெடித்தது.
இதையடுத்து, அங்கு கூடியிருந்த மக்கள் பயத்தில் ஓடத் துவங்கினர். அதற்கடுத்த சில நிமிடங்களில், கூட்டம் நடந்த அரங்கத்தில் வேறு இரண்டு இடங்களிலும் குண்டுகள் வெடித்தன.
தொடர்ந்து மூன்று குண்டுகள் வெடித்ததும், அந்த இடத்தில் தீப்பற்றியது. மக்கள் முண்டியடித்து வெளியேற முயன்றனர். நாற்காலிகள் உள்ளிட்டவை சிதறியதில், தீ வேகமாக பரவத் துவங்கியது.
தகவல் அறிந்ததும், தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். இதற்கிடையில், இந்த சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்தார்.
கண்டனம்
இதைத் தவிர, 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் ஒரு பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள, பலத்த காயமடைந்த சிலர் அபாய கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பத்துக்கு கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் கண்டனமும், அதிர்ச்சியும் தெரிவித்து உள்ளனர்.
‘மத வழிபாட்டு நிகழ்ச்சியில் குண்டு வெடித்துள்ளசம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது’ என, சமூக வலைதளப் பதிவில் கவர்னர் ஆரிப் முகமது கான் குறிப்பிட்டுள்ளார்.
புதுடில்லியில் கட்சி தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ”இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷடவசமானது. இது தொடர்பான முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை மாநில அரசு மிகவும் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது,” என, குறிப்பிட்டார்.
”இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக சிறப்பு புலனாய்வு அமைப்புக்கு விசாரணை உத்தரவிடப்படும். ‘டிபன் பாக்ஸ்’ வாயிலாக இந்த குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்கட்ட விசாரணைக்குப் பிறகே, இது பயங்கரவாத சம்பவமா என்பது தெரியவரும்,” என, மாநில போலீஸ் டி.ஜி.பி., ஷேக் தர்வேஷ் சாஹப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக பேசினார். அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மத்திய அரசு தயராக உள்ளதாக அமித் ஷா குறிப்பிட்டார்.
இந்நிலையில், அமித் ஷாவின் உத்தரவின்படி, இந்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் உயரதிகாரிகள், கேரளாவுக்கு விரைந்துள்ளனர். என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படையை அதிகாரிகளும் விரைந்துள்ளனர்.
கேரள வருவாய் துறை அமைச்சர் கே. ராஜன் கூறியுள்ளதாவது:
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போருடன் இந்த சம்பவத்தை தொடர்புபடுத்துவது முறையல்ல. இவ்வாறு பொய்யான செய்திகளை, வதந்திகளை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலஸ்தீன மக்களுக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம். அதை திசை திருப்பும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுதும் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருவர் சரணடைந்தார்!
கேரள குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்தியதாக, திருச்சூர் மாவட்டம் கோடகரா போலீஸ் ஸ்டேஷனில் ஒருவர் சரணடைந்தார். விசாரணையில் அவருடைய பெயர் டொமினிக் மார்ட்டின் என்பதும், கொச்சியைச் சேர்ந்த இவரும், ஜெகோவா பிரிவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்து உள்ளது.ஆனால், எதற்காக அவர் இந்த தாக்குதலில் ஈடுபட்டார் என்பது குறித்தவிபரங்கள் வெளியிடப்படவில்லை.
குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன், கூட்ட அரங்கம் அமைந்துள்ள வளாகத்தில் இருந்து, நீல நிற கார் ஒன்று வேகமாக வெளியேறியது. குண்டை வைத்தவர்கள் அதில் தப்பிச் சென்றனரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே, ஜெகோவா பிரிவைச் சேர்ந்தவர் என கூறிக் கொள்ளும் மார்ட்டின் என்பவர், சமூக வலைதளத்தில், ‘வீடியோ’ ஒன்றை பதிவு செய்துள்ளார்.’இந்த அமைப்பு, நம் நாட்டுக்கு எதிராக செயல்படுகிறது. அதனால், குண்டு வைத்து தாக்குதல் நடத்தினேன்’ என, அதில் அவர் கூறியுள்ளார்.
நாடு முழுதும் தீவிர கண்காணிப்பு!
கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. தேசிய தலைநகர் புதுடில்லியில் உள்ள முக்கிய சர்ச்சுகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதுபோல, மஹாராஷ்டிரா, உத்தர பிரதேச அரசும், தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், கேரள மாநில எல்லைகளில் உள்ள கன்னியாகுமரி, தென்காசி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேக நபர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ், ரயில், விமான நிலையங்கள் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளன. மாநிலத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், சோதனை பலப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று மோப்ப நாய், வெடிகுண்டு செயலிழிப்பு நிபுணர்களுடன், தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் பயணியரின் உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மாநிலம் முழுதும் உளவு போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். பயங்கரவாதிகள் தடுப்பு பிரிவு போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் உள்ளனர். வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. காவல் நிலையங்களில், 24 மணி நேரமும் போலீசார் இருக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது’ என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்