Army Major sacked by President Murmu | ராணுவ மேஜர் பணி நீக்கம் ஜனாதிபதி முர்மு அதிரடி

புதுடில்லிராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்புடைய நபருக்கு பகிர்ந்த குற்றச்சாட்டில், இந்திய ராணுவத்தின் அணுசக்தி படைப் பிரிவின் மேஜர், ஜனாதிபதி திரவுபதி முர்முவால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்திய ராணுவத்தில் எஸ்.எப்.சி., என்ற பெயரில் அணுசக்திப் படைப் பிரிவு இயங்குகிறது.

இந்த படைப்பிரிவில் மேஜராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட அதிகாரி, பாகிஸ்தான் உளவாளிக்காக பணியாற்றிய நபருடன், சமூக வலைதளம் வாயிலாக தொடர்பில் இருந்துள்ளார்.

அந்த நபருடன் ராணுவ ரகசியங்களை பகிர்ந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக விசாரிக்க அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணையின் போது, பாதுகாக்கப்பட வேண்டிய ராணுவ ரகசிய தகவல்கள் மேஜரின், ‘மொபைல் போனில்’ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குற்றச்சாட்டு உறுதியானதால் கடந்த செப்டம்பரில் ராணுவ மேஜர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, ராணுவ மேஜரின் பதவி நீக்கம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் பிரிகேடியர் ரேங்கில் உள்ள அதிகாரி மற்றும் சிலர் மீது பாதுகாப்பு நெறிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு உள்ளது. அடுத்த சில வாரங்களில் அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.