உழைப்பால் வலுவேறிய சாகச மங்கை…

பெண்கள் மிக அரிதாகக் காணப்படும் `பாடி பில்டிங்’ போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் சங்கீதா. திருப்பத்தூர் மாவட்டம், மேட்டுப் பாளையம் கிராமத்தில் தனது குடிசை வீட்டில், தன் பதின் பருவ பிள்ளைகள் தினேஷ்குமார், நந்தினி மற்றும் வறுமையுடன் வாழ்கிறார்.
மதுப்பழக்கத்துக்கு அடிமையான கணவர் இறந்துவிட, தோல் ஃபேக்டரி வேலை, மேஸ்திரி வேலை, வீட்டு வேலை, கழிவறை சுத்தம் செய்யும் வேலை எனக் கிடைக்கும் வேலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். உழைப்பால் வலுவேறிப் போயிருந்த தன் தசைகளைப் பார்த்தவருக்கு, பாடி பில்டிங் எண்ணம் தோன்றியிருக்கிறது.
ஃபிட்னெஸில் நடிகர் சரத்குமாரை தன் ரோல் மாடலாகச் சொல்லும் சங்கீதா, ஜிம்மில் சேர்ந்திருக்கிறார். ஊரும், உறவும் ஏசியதையெல்லாம் மன உறுதியுடன் கடந்துவிட்டார். ஆனால், ஜிம்முக்குக் கட்ட காசு இல்லை. அவரின் பயிற்சியாளர் குமாரவேல் இலவச பயிற்சியளித்து இயன்ற உதவிகளைச் செய்ய, 2020-ம் ஆண்டு முதன்முதலாக பாடி பில்டிங் போட்டியில் கலந்துகொண்டார்.
2022-ம் ஆண்டு தென்னிந்திய அளவிலான பெண்களுக்கான பாடி பில்டிங் போட்டியில் தங்கம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த சங்கீதாவுக்கு… `சாகச மங்கை’ விருதை, முன்னாள் அமைச்சர், முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார் வழங்க கௌரவித்தார்.
ரியல் லைஃப் காமெடிகளை பல கெட்அப்களில் தந்தவர்…

சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சரான ஸ்ரீமதி சீமுவின் வீடியோ நகைச்சுவைக் களமாகவே இருக்கும்.
குழந்தையாக இருந்தபோது `பூ’ திரைப் படத்தின் `சூச்சூ மாரி’ பாடலைப் பாடி நமக்குச் செல்லக் குரலாக அறிமுகமானவர், தொடர்ந்து சில திரைப்படங்களில் பின்னணி பாடினார். டிகிரி முடித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இந்த சென்னைப் பெண், கொரோனா லாக்டௌன் காலத்தில் இன்ஃப்ளூயன்சர் அவதாரம் எடுத்தார்.
ரியல் லைஃப் காமெடிகளை பல கெட்அப்களில் தோன்றி இவர் வெளியிட்ட வீடியோக்கள் செம ஹிட். தங்கச்சி சோதனைகள், சீரியல் Vs ரியாலிட்டி, பீரியட்ஸ் பேசினால், அடுப்பில் வைத்த பால் பேசினால்… இப்படியான இவரது காமெடி கான்செப்ட் வீடியோக்கள் பல மில்லியன் வியூவ்ஸை தாண்டுகின்றன. ஜி.வி.பிரகாஷ், ஹரிஷ் கல்யாண், பிரதீப் ரங்கநாதன், முகின் ராவ் என ஸ்டார்ஸுடன் இவர் செய்த ரீஸ்ல், 2K கிட்ஸிடம் ஹிட். 90’s கிட்ஸ், 80’s கிட்ஸ்களையும் தனது வீடியோக்களுடன் தங்களைப் பொருத்திப் பார்த்துச் சிரிக்கவைத்தவர்.
ஸ்ரீமதி சீமுவுக்கு `வைரல் ஸ்டார்’ விருதை, நடிகை அபர்ணதி வழங்கி கௌரவித்தார்.
அன்பும் அறமும் உடைய `இலக்கிய ஆளுமை’

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாட்டியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம் என்கிற இளம்பிறை. ஏழ்மையான குடும்பத்தின் ஐந்தாவது பெண்ணாகப் பிறந்தவருக்கு இளம் வயதிலேயே உரைநடை, கவிதை என எழுத்து வசப்பட இவரது இலக்கிய வானம் பரந்து விரிந்தது.
இளம்பிறையின் படைப்புகளில் அன்பும் அறமும் இழைந்தோடும். கிராமிய கவிதை மொழியுடன் நவீன கவிதை மொழியும் கைவரப்பெற்ற இவரின் படைப்புகள், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் பாடங்களாக இடம் பெற்றுள்ளன.
தமிழக அரசின் தொடக்கக் கல்வி தமிழ் பாடப்பொருள் உருவாக்கப் பணியில் தொடர்ந்து பங்களித்து வரும் இளம்பிறை, திரைப்படங்களிலும் பாடல்கள் எழுதியிருக்கிறார். சென்னையில் உள்ள ஓர் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியரான இவர், தான் ஏறும் அனைத்து மேடைகளிலும் புத்தக வாசிப்பின் அவசியத்தை, அருமையை வலியுறுத்தத் தவறு வதில்லை. படைப்புகளின் மூலமும் பேச்சின் மூலமும் வாசிப்பின் நேசம் கடத்தும் இளம் பிறைக்கு… ‘இலக்கிய ஆளுமை’ விருதை, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வழங்கி கௌரவித்தார்.
கல்வியே பெண்களை உயர்த்தும் – கருணாஸ்

விவசாயத்தை விட்டு பலரும் ஒதுங்கும் சூழலில் மண்ணில் தன் எதிர்காலத்தை விதைத்தவர், சென்னையைச் சேர்ந்த அர்ச்சனா ஸ்டாலின். ஐ.டி நிறுவன ஊழியரான இவர், நம்மாழ்வாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இயற்கை விவசாயம் செய்ய திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தார். விளை பொருளுக்கேற்ற விலை கிடைக்காமல் வாடிய விவசாயிகள் அவரை யோசிக்கவைத்தனர். அடுத்த தலைமுறை விவசாயத்தை கைவிடவும் அதுவே காரணம் என்று உணர்ந்தவர், தீர்வைத் தேடினார். `மை ஹார்வெஸ்ட்’ என்ற நிறுவனத்தை தொடங்கி, இயற்கை விவசாயி களின் பொருள்களை சந்தைப்படுத்தி, உரிய லாபத்தை அவர்கள் கையில் கொடுத்தார். இவர் மேல் நம்பிக்கை ஏற்பட, பலரையும் இயற்கை விவசாயத்திற்கு அழைத்து வந்தார். குறிப்பாக, தங்கள் குடும்ப நிலத்தை விற்க நினைத்த இளைஞர்கள் பலர் இவருடன் கைகோத்தனர். விவசாயிக்கான வயது இலக் கணத்தை உடைத்து, 26 முதல் 35 வயது வரையுள்ள 240 இளம் தலைமுறை விவ சாயிகள் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார். தற்போது மாதந்தோறும் 8,000 குடும்பங்களுக்கு நச்சற்ற உணவு விநியோகம் செய்கிறது அர்ச்சனாவின் பசுமைப் படை. விவசாயத்தையும், விவசாயிகளையும் தலைநிமிரச் செய்யும் அர்ச்சனாவுக்கு… `பசுமைப் பெண்’ விருதை நடிகர், அரசியல்வாதி, விவசாயி என பன்முகத்திறன் கொண்ட கருணாஸ் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கருணாஸ் பேசுகையில், “கல்விதான் பெண்களை உயர்த்தும். கல்வி இருந்தால் செல்வம், வீரம் தானாக வந்துவிடும். நடிப்பு, சினிமாவை விட எனக்கு விவசாயம்தான் நல்ல பெயரை தந்தது. எனக்கு விவசாயம்தான் அதிகம் பிடிக்கும்” என்றார்.
ஆதரவற்றவர்களை அரவணைக்கும் தேவதை…

ஆதரவற்றவர்களை தன் பெற்றோர்களாக அரவணைத்துக் கொள்கிறார் மனீஷா கிருஷ்ணசாமி. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியரான இவர், 2017-ம் ஆண்டு முதல், தெருவோரம் வசிக்கும் ஆதரவற்றவர் களை மீட்டு, சுத்தப்படுத்தி, சிகிச்சையளித்து நண்பர்கள் மற்றும் காவல்துறை உதவியுடன் அரசு காப்பகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் காப்பகங்களில் சேர்த்து வருகிறார்.
கொரோனா காலத்தில் காய்ந்த வயிறுகளுடன் தவித்த 90-க்கும் மேற்பட்டவர் களை மீட்டு, ஈரோடு மாநகராட்சி ஆணையரின் அனுமதி பெற்று, ஓர் அரசுப்பள்ளியில் தங்க வைத்தார். அவர்களில் உடல், மன ஆரோக்கியத்துடன் இருந்தவர்களுக்குக் கைத்தொழில் களைக் கற்றுக்கொடுத்து வேலை வாய்ப்பு களை உருவாக்கிக் கொடுத்தார். தன் சம்பளத்துடன், இரவு நேரங்களில் லோடு இறக்கும் வேலை செய்வது, கறிக்கடையில் பகுதி நேர வேலை பார்ப்பது எனப் பணம் ஈட்டியும், நல்லுள்ளங்களிடம் உதவிபெற்றும் கைவிடப் பட்டவர்களை கவனித்துக் கொண்டவர், தற்போது மேற்படிப்பு படிக்கிறார் இப்பணிகளையும் ஒருங்கிணைத்தபடி. இதுவரை 500-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களை தன் குடும்பமாக இணைத்துக்கொண்டிருக்கும் மனீஷாவுக்கு… `சேவை தேவதை’ விருதை சென்னை மாநகராட்சியின் ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மற்றும் Culinary Expert, Woman Entrepreneur கிருத்திகா ராதாகிருஷ்ணன் இணைந்து வழங்கி சிறப்பித்தனர்.
கல்வித்தாரகை விருது பெற்ற ராஜேஸ்வரி

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு ராஜேஸ்வரி தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது, 169 மாணவர்கள் மட்டுமே படித்தனர். அதை 540 ஆக உயர்த்திக்காட்டினார்.
முன்னாள் மாணவர்கள், மற்றும் பலரிடமும் உதவி பெற்று வகுப்பறை கட்டடங்கள், ஸ்மார்ட் வகுப்பறை, கழிப்பறை வசதி, கை கழுவும் இடம் முதல் மாணவர்களுக்குத் தேவையான பேக், பாட்டில், குடை உள்ளிட்ட பொருள்கள் வரை பெற்றுத் தந்தார். தனியார் மருத்துவமனை உதவியுடன் பள்ளியில் இவர் கண் சிகிச்சை முகாம் நடத்த, பார்வைக்குறைபாடு கொண்ட மாணவர் களுக்குக் கண்ணாடி கிடைத்தது. தங்கள் மாணவர்கள் பலவிதமான போட்டிகளிலும் பங்கெடுக்க ஊக்கமும், வழிகாட்டலும் இவர் கொடுக்க, அவர்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவில் முதலிடம் பிடித்துப் பல பரிசுகளை கொய்து வந்தனர் தங்கள் பள்ளிக்கு.
இவருடைய நிகரில்லாத ஈடுபாட்டாலும் முயற்சியாலும், 2021-22 கல்வியாண்டில் மாநில அளவில் மிகச் சிறந்த பள்ளியாகக் குத்தாலம் அரசு நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. இப்படியொரு தலைமை ஆசிரியர் வேண்டும் எனப் பல அரசுப் பள்ளிகளை ஏங்க வைக்கும் இந்த ஆல மரத்துக்கு… `கல்வித் தாரகை’ விருதை இயக்குநர் பாண்டிராஜ் வழங்கி சிறப்பித்தார்.
பெஸ்ட் மாம் விருது பெற்ற அழகு பரத்வாஜ்…

வாலிபால் பிளேயரான உஷா என்கிற அழகு பரத்வாஜ் -க்கு, விளையாட்டில் இந்திய அளவில் சாதிக்கும் கனவு, கனவாகவே போனது. அவரின் இளைய மகன் சாய் சுதர்சனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வமிருப்பதைக் கண்டுபிடித்தவர், மகனின் கனவையே தனதாக்கிக் கொண்டார். நனவாகியிருக்கும் அந்தக் கனவு இன்று ரன்களையும் ரசிகர்களையும் குவித்துக்கொண்டிருக்கிறது.
21 வயதாகும் இந்தப் புயல் பேட்ஸ்மேன் மைதானங்களை அதிரவைக்கும் மேட்ச்களில் எல்லாம் பார்வையாளர்கள் வரிசையில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்க அமர்ந்திருக்கிறார், அவரின் அம்மா உஷா என்கிற அழகு பரத்வாஜ்.
படிப்புதான் வாழ்க்கை எனப் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் பெரும்பான்மை பெற்றோருக்கு மத்தியில், விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து முன்னுதாரணமாகி இருக்கும் உஷாவுக்கு… `பெஸ்ட் மாம்’ விருதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி கௌரவித்தார்.
ஃபிட்னெஸ் பயிற்சியளிக்கும் `ஸ்ட்ரெங்த் அண்ட் கண்டிஷனிங் கோச்’சான (Strength and Conditioning Coach) உஷா, தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணியினர், நம்பர் ஒன் விளையாட்டு வீரர்கள், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் எனப் பலருக்கும் கோச். சாய் சுதர்சனுக்கு முன்னரே விளையாட்டு உலகில் பிரபலமானவர் என்பது குறிப்பிடதக்கது.
எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ்ப் பெண்…

எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ்ப் பெண் என்ற சாதனையைச் சொந்தமாக்கியிருப்பவர், முத்தமிழ்செல்வி. திருமணத்துக்குப் பிறகு பட்டப்படிப்பை முடித்து தன் சிக்ஸர்களை தொடங்கியிருக்கிறார் இந்த சென்னை பெண். மலை ஏறுவதில் ஆர்வம்கொண்டு இவர் பயிற்சிகள் செய்தபோது விமர்சனங்களும், கேலிகளும் சூழ்ந்தன. அவற்றுக்கெல்லாம் தன் வெற்றி மூலமே பதில் சொல்ல வேண்டும் என்று வைராக்கியம் பூண்டார். முதல் முயற்சி யாக, கண்களைக் கட்டிக்கொண்டு 155 அடி உயரம் கொண்ட மலையில் இருந்து கீழே இறங்கினார். அந்தத் திகைப்பு அடங்குவதற் குள், தன் மகளுடன் 165 அடி உயரம் கொண்ட மலையில் இருந்து கண்களைக் கட்டிக் கொண்டு கீழே இறங்கினார். தன் ஒவ்வொரு சாதனையையும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்கான எதிர்ப்பாகப் பதிவு செய்தார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோது, அந்த உறை குளிரில் உடல்நலக் குறைவு, ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை என உயிர் பறிக்குமளவுக்குத் தன்னை பயமுறுத்திய சவால்களை எல்லாம் கடந்தார். 34 வயதில், இரண்டு குழந்தைகளின் அம்மாவாக, எவரெஸ்ட் சாதனை சூடியிருக்கும் முத்தமிழ் செல்விக்கு… `சிங்கப்பெண்’ விருதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி கௌரவித்தார்.
ஸ்பெஷல் அச்சீவர் – நிகார் ஷாஜி

சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் முதல் முயற்சியான ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் பாய்ந்தபோது, உலகமே ஆச்சர்யக் கண்களை இந்தியா மீது பதித்தது. அந்த வரலாற்றுச் சாதனைக்குப் பின்னிருந்த அழுத்தங்களைத் தாங்கி வெற்றியை வசப்படுத்தியவர், அதன் திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி. தேசத்தையும், தமிழ்நாட்டையும் தலை நிமிரச் செய்த செங்கோட்டை பெண். அரசுப் பள்ளி, அரசுக் கல்லூரிகளில் கற்று வந்த கற்பூரம். விவசாயக் குடும்பத்தில் இக்கட்டான பொருளாதார சூழலில் வளர்ந்தவர், பொறியியல் முடித்தபோது நாளிதழில் பார்த்த வேலை வாய்ப்பு செய்தி மூலம் இஸ்ரோ கதவை தட்டினார். திறந்தது பால்வெளி அவருக்கு. கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தடமாக்கினார். மகள், மனைவி, அம்மா உள்ளிட்ட பொறுப்பு களை பூரணமாகப் பார்த்தபடியே, விஞ்ஞானி யாகத் தன் கரியரை செதுக்கினார். தன் 36 வருட பணி வாழ்க்கையில் கற்றலுக்கு மட்டும் விடுமுறை விடாமல் தொழில்நுட்பத்தில் தன்னை அப்டேட் செய்துகொண்டவருக்கு, பெரும் பொறுப்புகளை வழங்கி வளர்த்தெடுத்தது இஸ்ரோ. தமிழகத்தின் தென்கோடியில் இருந்தும், வாழ்வில் அடித்தட்டில் இருந்தும் முன்னேறி வானில் இந்தியாவின் பெயரை எழுதிய நிகார் ஷாஜிக்கு… `ஸ்பெஷல் அச்சீவர்’ விருதை வழங்க, முன்னாள் உள்துறை செயலாளர், முன்னாள் திட்டக்குழு தலைவர் சாந்த ஷீலா ஐ.ஏ.எஸ் கௌரவித்தார்.
யூத் ஸ்டார் ஐஸ்வர்யா லட்சுமி

`குந்தவையா… நந்தினியா?’ என்றிருந்த களம், `பொன்னியின் செல்வன்’ திரைப்பட டிரைலர் வந்தபோது ‘பூங்குழலி’யை நோக்கித் திரும்பியது.
தமிழ் ரசிகர்களையும், மலையாள ரசிகர்களையும் அடிக்கடி தன்னை திரும்பிப் பார்க்க வைக்கும் படங்களைக் கொடுத்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி… ஒரு மருத்துவர். எம்.பி.பி.எஸ் படித்தபோதே மாடலிங் செய்யத் தொடங்கியவர், 2017-ல் மல்லுவுட்டில் அறிமுக மானார். முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் பல பாராட்டுகளையும், விருதுகளையும் தட்டித் தூக்கினார். தொடர்ந்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் `கார்கி’, `பொன்னியின் செல்வன்’, ‘ஜெகமே தந்திரம்’, `கட்டா குஸ்தி’ என… தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் ஆனார். ‘கார்கி’ படம், அதன் தயாரிப்பாளராகவும் அவரை வாகை சூட வைத்தது. காதல், த்ரில்லர், பீரியட் ஃபிலிம், உமன் எம்பவர்
மென்ட் படம் எல்லா ஜானர் படங்களிலும், திரையில் தனக்கான ஸ்பேஸுடன் தடம் பதித்து வருவது ஐஸ்வர்யா லட்சுமியின் ஸ்பெஷல். சினிமா முதல் ரிலேஷன்ஷிப் கேள்விகள் வரை… நேர்காணல்களில் இவரது நேருக்கு நேரான பேச்சுக்கும் பதில்களுக்கும் வந்து குவிகின்றன ஆர்டின்கள். வசீகரத்துடன் துணிவும் தெளிவும் ஒருங்கிணையப்பெற்ற இந்த டாக்டர், ஆக்டர், தயாரிப்பாளர் திறமையாளருக்கு… `யூத் ஸ்டார்’ விருது வழங்கி சிரபித்தார் நடிகர் சித்தார்த்.
தாய்ப்பால் தானம்: காப்பாற்றப்படும் சிசுக்கள்..

அவிநாசியைச் சேர்ந்ந ரூபா செல்வநாயகி, தாய்ப்பால் தானத்தின் தொடக்கப்புள்ளி. இவருக்குக் குழந்தை பிறந்தபோது கோவை, அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கியில் தானம் செய்தவர், அதையே சேவையாகத் தொடர தன்னார்வலராகக் களமிறங்கினார். பெண்கள் பலரும் அதே அக்கறையுடனும் விழிப்புணர்வுடனும் கைகோத்தனர்… `அமிர்தம் தாய்ப்பால் தானம்’ குழுவாக ஒருங்கிணைந்தனர். இன்று இந்தச் சேவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவடைந் துள்ளது. மேலும் புதுச்சேரி, கேரளா, கர்நாடக மாநிலங்களிலும் இக்குழுவின் ஒருங்கிணைப்பால் பலர் தாய்ப்பால் தானம் செய்கின்றனர். ஒவ்வொரு மாதமும் மாநிலம் முழுக்க சராசரியாக 300-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் என ஆண்டுக்கு 2,000 லிட்டர் வரை அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் தானம் செய்கிறார்கள். இதனால் அரசு மருத்துவமனைகளில் சிசுக்கள் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது என்ற அரும்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திருக்கும் `அமிர்தம் தாய்ப்பால் தானம்’ குழுவை வாழ்த்தி வெற்றிப்படை விருதை நடிகர் சித்தார்த் வழங்கி சிறப்பித்தார்.
பெண்களுக்கு தற்காப்பு கலை அவசியம்…

சுபஷெரின்
மூன்று வயதில், சிலம்பப் பயிற்சி எடுக்கத் தொடங்கிய சுபஷெரின் சிலம்பம் முதல் அடிமுறை வரை கற்றுத்தேர்ந்தவர். நாகர்கோயிலைச் சேர்ந்த இவரின் பெற்றோர் சிலம்பம் மற்றும் அடிமுறைக்கலைஞர்கள் என்பதால், சிலம்பாடி வளர்ந்ததுள்ளார்.
அப்பா தான் என் ஆசான் என்று கூறும் சுபஷெரின் ஆறு வயதில் இருந்தே வட்டாரம், மாவட்டம், மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.

குத்துவரிசை, கம்பு வீச்சு, வேல் கம்பு வீச்சு, மான் கொம்பு, இரட்டைவாள் வீச்சு, சுருள்வாள் வீச்சு, அழிவின் விளிம்பில் இருக்கும் அடிமுறைக் கலை என அனைத்தையும் கற்றுத்தேர்ந்தார். குறிப்பாக, ஆறுமுனைகள் கொண்ட நட்சத்திர தீப்பந்தத்தை இந்தக் குட்டி மத்தாப்பு சர்வ சாதாரணமாகக் கையாளும் லாகவம், ஆச்சர்யம். தமிழனின் பாரம்பர்ய கலையான சிலம்பத்தில் மாநில, தேசிய, உலக அளவிலான போட்டிகளில் தங்கங்களையும் வெள்ளிகளையும் அள்ளி வந்துகொண்டிருக்கும் 15 வயதான இவருக்கு `லிட்டில் சாம்பியன்’ விருதை ஆக்ஷன் கொரியோகிராஃபர்ஸ் ’ஸ்டன்’ சிவா, மற்றும் லானி சிவா வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் ஸ்டன் கொரியோகிராஃபர்ஸ் லானி சிவா பேசும்போது, “பெண்கள் தற்காப்புக் கலையை அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
`எவர்கிரீன் நாயகி’ – நதியா

1980-களில் அறிமுகமானவர் நதியா. இவரது அழகும், நடிப்பும் இன்றுவரை ஜொலித்துக்கொண்டே இருக்கின்றன.
முதல் படத்திலிருந்தே மக்கள் இவரை தங்கள் இதயத்தேரில் ஏற்றிக் கொண்டார்கள். நதியா கொண்டை, நதியா கம்மல், நதியா டிரஸ் என ஃபேஷன் உலகத்தையும் ரசிகர்களையும் இணைத்த நட்சத்திரம். முன்னணி ஹீரோக்களுடன் மிடுக்கான ஹீரோயினாக நடித்து ஈர்த்தவர், கேரக்டர் ரோல்களிலும் மிளிர்ந்தார். புகழின் உச்சியில் இருந்தபோதே சினிமாவுக்கு `பை’ சொல்லிவிட்டு மணவாழ்க்கையில் செட்டில் ஆனபோது, `மிஸ் யூ’ என்று கதறினார்கள் ரசிகர்கள்.
16 வருடங்கள் கழித்து குமரனின் அம்மா மஹாலட்சுமியாக இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தவர், அதுவரை அம்மா கேரக்டர்கள் என்றாலே முதுமை, டல்லான டிரஸ்ஸிங், சோகம் என்றிருந்த கிளிஷேக்களையெல்லாம் உடைத்து நொறுக்கி `வாவ்’ சொல்லவைத்தார்.
80-ஸ் கிட்ஸ் கொண்டாடிய நதியாவை, 2கே கிட்ஸும் ரசிக்கிறார்கள். ஏறக்குறைய 40 வருடங்களாக தென்னிந்திய திரையுலகில் தன் ஸ்டைலிஷான நடிப்பால் தடம்பதித்து வரும் நதியாவுக்கு எவர்கிரீன் நாயகி விருதை எடிட்டர் மோகன் மற்றும் இயக்குநர் மோகன் ராஜா இணைந்து வழங்கி சிறப்பித்தனர்.
கலை நாயகி விருது பெற்ற முத்துக்கண்ணம்மாள்…

நாட்டியக் கலையின் முன்னோடியாகக் கருதப்படும் சதிராட்டக் கலையின் கடைசி வாரிசு, முத்துக்கண்ணம்மாள். இவர் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை பூர்வீகமாக கொண்டவர்.
ஏழு வயதிலேயே சதிராட ஆரம்பித்தவர் அவர் கடந்து அனுபவத்தை அவள் விகடன் விழா மேடையில் நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார்.
ராஜாக்கள் காலத்தில் தினமும் கோயிலில் காலை, மாலை என இருவேளைகளில் 200 படிகள் ஏறி, முருகனை வணங்கிப் பாடி, ஆடி வந்தார். மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தபிறகு, கோயில்களில் சதிராட்டம் ஆடவும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. இவருடன் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் சதிராட்டம் ஆடி வந்த 31 பெண்கள் அதன்பிறகு விவசாயம் உள்ளிட்ட மாற்று வேலைகளுக்குச் சென்றனர்.
சதிராட்டத்தில் மனதார கரைந்திருந்த முத்துக் கண்ணம்மாள், அதை கைவிட மனமின்றி, கற்றுக்கொள்ள விரும்பிய பலருக்கும் பயிற்று வித்து வருகிறார், இந்த 84 வயது வரை. மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றிருப்பவருக்கு, தமிழக அரசு கலைஞர்களுக்காக வழங்கும் ரூ.3,000 உதவித்தொகை மட்டுமே வருமானம். ஆனாலும், இந்த வயோதிகத்திலும், தான் கற்ற கலை அதன் கடைசி பிரதியான தன்னோடு அழிந்துவிடக்கூடாது எனப் பிரயத் தனப்படும் முத்துக்கண்ணம்மாளுக்கு… `கலை நாயகி’ விருதினை, சமூகச் செயற்பாட்டாளர் ரோகிணி வழங்கி சிறப்பித்தனர்.
மேடையில் வள்ளி, முருகன் பாடலை பாடி கலைத்திறனை வெளிப்படுத்தி நெகிழ வைத்தார் முத்துக்கண்ணம்மாள்.
வே.வசந்தி தேவிக்கு தமிழன்னை விருது….

40 ஆண்டுகளாகத் தொடர்ந்து கல்வித்தளத்திலும், சமுதாயத்திலும் மாற்றங்களுக்கு வித்திட்டவர் வே.வசந்தி தேவி.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியபோது மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பையும் ஒருங்கிணைத்து, பாடத்திட்டத்தை மாற்றியமைத்தது முதல் பல பணிகளை முன்னெடுத்தார்.
`நம் சமூகப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு கல்வியிலிருந்துதான் பிறக்க முடியும்’ என்று கூறும் இவர் கற்றல் நலனுக்கான `பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்’தை தொடங்கி இன்று வரை களமாடி வருகிறார்.
1980-களின் இறுதியில் உசிலம்பட்டி பெண் சிசுக்கொலைகளை, களத்துக்குச் சென்று தரவுகளோடு ஆவணப்படுத்தினார். பள்ளி மாணவர்களின் தற்கொலை அவலங்களைத் தடுக்க மிகுந்த அக்கறை காட்டுபவர். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியபோது பெண்கள் பாதுகாப்புக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை உலகுக்கு கவனப்படுத்தினார். தற்போது தமிழக அரசு உருவாக்கியிருக்கும் பள்ளி மேலாண்மைக் குழுவிலும் பங்களித்திருக்கிறார். உரையாடல்கள், கட்டுரைகள், புத்தகங்கள், செயல்பாடுகள் என 85 வயதிலும் சமூக முன்னேற்றத்துக்கு ஓய்வறியாது பங்களித்து வருகிறார்.

கல்வியாளர், சமூகச் செயற்பாட்டாளர் வே.வசந்தி தேவிக்கு தமிழன்னை விருதினை நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் விழாவில் வழங்கி சிறப்பித்தார். அத்துடன் வே.வசந்தி தேவிக்கு மலர் கிரீடம், வீரவாள் அளித்து பெருமைபடுத்தினார்.
அந்த வாளை மீண்டும் தொல். திருமாவளவனுக்கு அளித்த வே.வசந்தி தேவி, “இந்த வாள் கல்வி வாளாக திருமாவளவன் கையில் விளங்கட்டும்… அனைவருக்கும் சமமான கல்வி என்பதை உறுதி செய்ய அவரது போராட்டம் தொடர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இந்நிகழ்வில் ஃபெதர்ஸ் ராதா ஹோட்டல் பொது மேலாலாளர் ஸ்ரீ ராம் உடனிருந்தார்.
இது ஆறாவது விருது வழங்கும் விழா…

எல்லா துறைகளிலும் பெண்கள் தனித்து தெரிய வேண்டும், தடம் பதிக்க வேண்டும் என்பதை 26 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் இருந்து அழுத்தி சொல்லி வருகிறது நம் அவள் விகடன். அது பெண்கள் படிப்பதற்கு மாதம் இருமுறை செய்திகளையும் கொடுத்து வருகிறது, சாதித்த பெண்களின் பெயர்களை உலகம் செய்தியாக படிப்பதற்கு அவர்களை அடையாளப்படுத்தி விருதுகளையும் கொடுத்து வருகிறது.
அந்தவகையில் சமூக சேவை, இலக்கியம், விவசாயம், விளையாட்டு, சினிமா என பல துறைகளிலும் தடம்பதித்து, சாதனை படைத்த பெண்களுக்கான விருது வழங்கும் விழா இன்று மாலை, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஃபெதர்ஸ் ராதா ஹோட்டலில் பிரமாண்டமாக தொடங்கியது….
பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசுவதோடு மட்டுமல்லாமல், முன்னேறிய பெண்களை பற்றி சமூகத்தை பேசவைக்கவும்… எங்கள் பெண்கள் சாதாரணமானவர்கள் அல்லர், அவர்கள் எந்த தடையையும் உடைத்து முன்னேறும் சாதனையாளர்கள் என உலகத்திற்கு உணரவைக்கவும், பெண்களின் சாதனைகளை இந்த சமூகம் அங்கீகரிக்கிறது என்ற நம்பிக்கையை ஒவ்வொரு பெண்களுக்குள்ளும் விதைக்கவும் அவள் விகடன் செய்யும் முயற்சியில் இது ஆறாவது விருது வழங்கும் விழாவாகும்…