மதுரை: சங்கரய்யாவுக்கான கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான பரிந்துரையை நிராகரித்த தமிழக ஆளுநருக்கு எதிராக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவர் காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55-வது ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை (நவ.2) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெ.குமார், பதிவாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இப்பட்டமளிப்பு விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க சிண்டிக்கேட் குழு தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியது. ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பியபோது, உரிய ஒப்புதல் அளிக்கப்படவில்லை. அவருக்கான பரிந்துரையை நிராகரித்ததாக தகவல் வெளியானது. இது பல்கலைக்கழக வட்டாரத்திலும், தமிழ்நாடு அரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்காத ஆளுநரை கண்டித்து மாணவர் காங்கிரஸ் அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக நுழைவு வாயில் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து, மதுரை காமராசர் பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூட்டமைப்பு சார்பிலும் இன்று பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, இப்பல்கலைக்கழகத்தில் நடக்கவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என்ற அறிக்கையும் வெளியாகி இருக்கிறது.
சங்கரய்யாவுக்கான கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்த காரணத்துக்காகவே அமைச்சர் பொன்முடி விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க அனுமதியை நிராகரித்த ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி, ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஆளுநருக்கு எதிரான சர்ச்சையால் கடைசி நேரத்தில் பல்கலைக்கழக நிர்வாக வட்டாரத்தில் பரபரப்பான சூழல் உருவாகி இருக்கிறது. இருப்பினும், விமான நிலையம், ஆளுநர் வரும் வழி நெடுங்கிலும், பல்கலைக்கழகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, ”சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பாக ஏற்கெனவே இருமுறை சிண்டிக்கேட் ஒப்புதல் பெற்று, ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும், 2-வது முறையும் நிராகரித்து இருப்பதாக தெரிகிறது. இது பற்றி நாங்கள் எதுவும் கருத்து கூற முடியாது. ஆனால், திட்டமிட்டபடி, 55-வது பட்டமளிப்பு விழா நடக்கும். அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டோம். ஏற்கெனவே ஒருமுறை நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றபோதும், உயர் கல்வி அமைச்சர் விழாவை புறக்கணித்த நிகழ்வும் நடந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம்” என்றனர்.
காமராசர் பல்கலைக்கழக ஊழியர் சங்க கூட்டு அமைப்பின் தலைவர் முத்தையா, நிர்வாகி சுந்தர மூர்த்தி கூறுகையில், ”பல்கலைக்கழகத்தில் ஆட்சி மன்றக் குழு தீர்மானத்தின்படி சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க பரிந்துரை செய்ததை செனட் ஒப்புதலுடன் அனுப்பப்பட்டது. இதை ஆளுநர் நிராகரித்துள்ளார். இது, கண்டிக்கத்தக்கது. காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகின்றனர். ஆளுநருக்கு அழைப்பிதழ் வழங்கிவிட்டு, உயர் கல்வித் துறை அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்க மறுத்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. அப்படி நடந்திருந்தால் அதுவும் கண்டனக்குரியது. மேலும், இப்பல்கலைக்கழக பேராசிரியர், அலுவலர்கள், ஊழியர்களுக்கு தாமதமாக ஊதியம் வழங்குவதும் வேதனை அளிக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளை கண்டித்துதான் ஆர்ப்பாட்டம் செய்தோம்” என்றனர்.
அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு: இதனிடையே, சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் பரிந்துரைத்த பிறகும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
மேலும் “தமிழக ஆளுநர் எந்த சட்டத்தையும் மதிப்பது இல்லை. திராவிட மாடல், பொருளாதார சமத்துவம், சமூக நீதி குறித்து பேசுபவர்களை கண்டாலே ஆளுநருக்கு பிடிப்பதில்லை. அதனால்தான், சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் இருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் கொடுக்க ஆளுநர் மறுப்பதற்கான காரணம் என்ன? ஏன் வழங்கவில்லை என்று ஆளுநர் விளக்கத் தயாரா? எதுக்காக இதையெல்லாம் செய்கிறார்?” என்று அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.