'சார்பட்டா'வை விட 100 மடங்கு சிறப்பாக இருக்கும்: தங்கலான் குறித்து விக்ரம் பேச்சு

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛தங்கலான்'. இதன் டீசர் இன்று காலை வெளியானது. தங்க வயல் சுரங்க பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளதை டீசரை பார்க்கும் போதே தெரிகிறது. டீசரில் இடம் பெற்றுள்ள சண்டைக்காட்சிகள், விக்ரம் உள்ளிட்ட படக்குழுவின் தோற்றம் கவனிக்க வைத்துள்ளது. படம் வரும் ஜன., 26ல் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீஸாகிறது.

டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் விக்ரம், “வரலாற்றில் இருக்கும் நல்ல விஷயங்களை கொண்டாடவேண்டும். கெட்ட விஷயங்களை மறக்க கூடாது. அது இனியும் நடக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். ரஞ்சித் மிக அழகாக கதைக்களத்தை விவரித்தார். சில விஷயங்களை நாம் மறந்துவிடுகிறோம். அப்படி நாம் மறந்ததை சித்தரித்திருக்கிறோம். அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த சமூகத்தினரின் வாழ்வியலைப் பேசும் இப்படம் நம்மை அழவைத்து சோகத்தை பிழியாமல் நிகழ்வுகளை யதார்த்தமாக பேசும் படைப்பாக இருக்கும்.

கே.ஜி.எப்.,ல் தங்கியிருந்து படப்பிடிப்பை நடத்தினோம். காலையில் அவ்வளவு வெப்பமாகவும், இரவில் அப்படியொரு குளிரும் இருக்கும். வெறும் கோவணத்தை கட்டிக்கொண்டு நடிக்க வேண்டியிருந்தது. 'ஒரு தேள் கொண்டுவாடா' என ரஞ்சித் சொன்ன 10 நிமிடத்தில் தேள் இருக்கும். பாம்பு கொண்டுவா என்றால் 5 நிமிடத்தில் இருக்கும். எங்கு பார்த்தாலும், பாம்பு, தேள்கள் உலாவும் இடம் அது. அப்படியான இடத்தில் செருப்பு இல்லாமல், பார்த்து பார்த்து நடந்தோம். அப்போதுதான் அந்த இடத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை உணர்ந்தோம். என்னுடைய உடை தொடங்கி தோற்றம் எல்லாமே அவர்களின் வாழ்வியல் தான். மேக்கப்புக்கு மட்டும் 4-5 மணி நேரம் ஆகும். படப்பிடிப்பு தளத்துக்கு சென்றபிறகு கோவணத்தை கட்டிக்கொண்டு கதாபாத்திரமாகவே மாறிவிடுவோம்.

முதன்முறையாக நான் லைவ் சவுண்டில் நடித்திருக்கிறேன். இதனால் உச்சரிப்பு, அதற்கான டோன், அந்த காலத்தின் பேச்சுவழக்கு தொடங்கி எல்லாத்தையும் கவனித்து நடிக்க வேண்டும். சிலசமயம் நடிக்கும்போது குரலில் மாற்றத்தை கொண்டுவரும்போது, அதற்கேற்ப முகபாவனை ஒத்துப்போகாது. இரண்டையும் சரிவர கவனிக்க வேண்டும். பெரும்பாலான ஷாட்கள் சிங்கிள் ஷாட்கள் தான். கேமரா சுற்றிக்கொண்டே இருக்கும். ஒரு தடவை மிஸ்ஸானால் மீண்டும் தொடக்கத்திலிருந்து நடிக்க வேண்டும். ரஞ்சித்தும் எங்களுக்காக படப்பிடிப்பில் கோவணத்துடன் தான் இருந்தார்.

முந்தைய நாள் எப்போடா முடியும் என இருக்கும். அடுத்த நாள் 'வாங்க ஷூட்டுக்கு போவோம்' என ஆர்வத்துடன் இருப்பேன். இப்படியான உணர்வை நான் எந்தப் படத்திலும் சந்தித்தது இல்லை. நன்றி ரஞ்சித். அந்தக் கதாபாத்திரத்துடன், வாழ்வியலுடன் வாழ்ந்துவிட்டு கார், விமானத்தில் செல்லும்போது ஏதோ வித்தியாசமான உணர்வாக இருக்கும். இந்தப் படம் மேக்கிங் அளவில் ரஞ்சித்தின் 'சார்பட்டா'வை விட 100 மடங்கு சிறப்பாக இருக்கும்.

ரஞ்சித்துடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம். தொடக்கத்தில் 2,3 நாட்கள் ஒருமாதிரி இருந்தது. பிறகு சிங்க் ஆகிவிட்டேன். அவரின் ஒவ்வொரு பிரேமும் அழகாக இருக்கும். சிறப்பான இயக்குநர் ரஞ்சித். நீங்கள் கணிப்பதை தாண்டி இந்தப் படம் வேற மாதிரியான படமாக இருக்கும். நான் இதுவரை நடித்த பிதாமகன், ஐ, ராவணன் ஆகிய படங்களில் தான் கஷ்டப்பட்டு நடித்தேன். ஆனால், தங்கலானை ஒப்பிடுகையில் அதெல்லாம் 3 சதவீதம் தான். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.