தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் மார்க்கெட், வணிக வளாகங்களில் உள்ள கடைகளை வாடகைக்கு விடுவதற்கான ஏலம் நடத்தியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், நகராட்சித் துறை நிர்வாக தணிக்கை குழுவினர் இன்று காலை முதல் மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாநகராட்சியில், பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு பேருந்து நிலைய வணிக வளாகத்தில் உள்ள 91 கடைகள், சரபோஜி மார்க்கெட்டில் 302 கடைகள், காமராஜ் மார்க்கெட்டில் 288 கடைகள், திருவள்ளூர் தியேட்டர் வணிக வளாகம், காந்திஜி வணிக வளாகம் என 1000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு, மாநகராட்சிக்குப் போதிய வருமானம் இல்லாததால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டபோது, மாநகராட்சி ஆணையராக பணியிலிருந்த சரவணக்குமார் வருமானத்தைப் பெருக்கும் நோக்கில், ஏற்கெனவே இருந்த கடை வாடகையை ரத்து செய்து விட்டு, திறந்தவெளி ஒப்பந்த முறையில் அந்தக் கடைகளை ஏலம் விட்டார்.
அப்போது, அதிக ஏலத்தொகைக்கு விடப்பட்டு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டன. ஆனால், ஒராண்டிற்குள்ளாக கடைகளை ஏலத்திற்கு எடுத்தவர்கள், வாடகை அதிகமாக உள்ளதாகக் கூறி கடைகளைத் திருப்பி ஒப்படைத்தனர். இதனால், மாநகராட்சி நிர்வாகம் கடைக்கான வாடகையை குறைத்து தீர்மானம் நிறைவேற்றியது. தஞ்சாவூர் திமுக மேயரான ராமநாதன் தலைமையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்துக்கு, திமுக உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், முன்னாள் ஆணையர் சரவணக்குமார் கடைகளை ஏலம் நடத்தியதில் பல்வேறு விதிமீறல்கள் நடந்தாக பல புகார்கள் எழுந்தன. இதையடுத்து, நகராட்சி நிர்வாக இணை இயக்குநர் லெட்சுமி தலைமையிலான தணிக்கை குழுவினர் இன்று காலை முதல், அதற்கான ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மாநரகாட்சி அலுவலர்கள் கூறியது, “தஞ்சாவூர் மாநகராட்சியின் வருமானத்தை பெருக்கும் நோக்கில், புதியதாக பொறுப்பேற்ற ஆணையர் மகேஸ்வரி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட கடைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதில் 1,100 கடைகளில், ஆயிரம் கடைகள் வாடகை விடப்பட்டதாகத் தெரிய வந்தது. தொடர்ந்து, நடைபெற்ற ஆய்வுகளில், 751 கடைகளுக்கு மட்டுமே ஏலம் நடத்தி, உரிய வாடகையுடன் செயல்பட்டதாக ஆவணங்கள் இருந்துள்ளன. மேலும், கடைகளை ஏலம் எடுத்தவர்கள் செலுத்திய வைப்புத் தொகையை, கடனில்லா மாநகராட்சியாக காட்டுவதற்காக விதியை மீறி, அந்த தொகையைச் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வழக்கமாக ஒருவர் வழங்கிய வைப்புத் தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அவரால் வாடகையைச் செலுத்த முடியவில்லை என்றால், அதை வாடகைக்காகத் தான் பயன்படுத்த முடியும். ஆனால் கடந்த ஒரு ஆண்டில் அந்த வைப்புத்தொகையை முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும், காந்திஜி வணிக வளாகத்தில் ஏற்கனவே 100க்கும் அதிகமான கடைகள் இருந்த நிலையில், அதை இடித்து விட்டு 3 நிறுவனங்களுக்கு மட்டும் தலா ரூ. 6 லட்சத்திற்கு, குறைந்த வைப்புத்தொகை பெற்றுக்கொண்டு முறையான ஒப்பந்தப்புள்ளி இல்லாமல் வாடகைக்கு விடப்பட்டுள்ளது தெரிந்துள்ளது” எனத் தெரிவித்தனர்.