10-வது தென் மற்றும் மத்திய ஆசியா உயிர்க்கோள காப்பக கூட்டமைப்பின் சார்பில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தேசிய நிலைத்த கடலோர மேம்பாட்டு மையத்தில் ‘கடலோர சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான அணுகுமுறை’ (Ridge to Reep) என்ற பெயரில் மூன்று நாள்களுக்கான கருத்தரங்கு மற்றும் களப்பயண நிகழ்வின் தொடக்க விழா நேற்று (நவ.1) நடைபெற்றது. யுனஸ்கோ, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், வேர்ல்டு லைப் ஸ்பேஷஸ் ஆகிய அமைப்புகள் இந்நிகழ்வுக்கு ஆதரவை வழங்கியுள்ளன.

நிகழ்வில் பேசிய யுனஸ்கோ, இயற்கை அறிவியல் பிரிவின் முதன்மை அதிகாரி முனைவர் பென்னோ போயர், “உலக அளவில் 8 பில்லியன் அளவில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு சுத்தமான காற்று, நீர் வேண்டுமென்றால் நாம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம். இதற்கு 134 நாடுகளில் பங்காற்றி வருகிறோம். நவம்பர் 3-ம் தேதியன்று சர்வதேச உயிர்க்கோளம் காப்பகங்கள் நாளாக (International Day for Biosphere Reserves) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் உயிர் பன்மயத்தை காக்க செயலாற்றுவோம். சுற்றுச்சூழல் சார்ந்த அறிவை மக்களிடம் வளர்த்து எடுக்க வேண்டும். நீடித்த நிலையான வளர்ச்சியே ஒவ்வொரு நாட்டுக்கும் தேவை. அதற்கு இயற்கை பொருளாதாரத்தை நோக்கி நாம் நகர வேண்டும். இயற்கையான ஓர் உலகத்தை நாம் உருவாக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
சூழல் ஆர்வலர் சீதாராமன் பேசியபோது, “உலக அளவில் கார்பன் வெளியேற்றத்தில் 25 சதவிகிதம் சீனா, 20 சதவிகிதம் அமெரிக்கா, 10 சதவிகிதம் ஐரோப்பிய நாடுகள், 7 சதவிகிதம் இந்தியா என்ற அளவில் உள்ளது. இதற்கெல்லாம் மாற்று உயிர் எரிபொருளை பயன்படுத்துவதுதான் தீர்வாக அமையும். நான் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவன். முன்பெல்லாம் டெல்டா மாவட்டங்கள் பசுமையாக இருக்கும். இப்போது அப்படியெல்லை. நம்முடைய பிள்ளைகளுக்கும் பேரன்களுக்கும் நல்லபடியான ஒரு பூமியை விட்டு செல்ல வேண்டுமென்றால், நாம் அனைவரும் சூழலை பாதுகாப்பதில் பங்கெடுக்க வேண்டும்” என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், “இயற்கை சார்ந்து நம்முடைய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது அவசியம். அதை நம்முடைய சந்ததிகளுக்கும் சொல்லி கொடுக்க வேண்டும். இங்கு எல்லா பொருள்களுமே இயற்கையிலிருந்து எடுத்தவைதான். நாங்கள் வாசிக்கிற புல்லாங்குழலிலிருந்து எல்லாமே மரங்களிலிருந்து கிடைத்தவைதான். எனவே அந்த இயற்கை மதித்து நடக்க வேண்டிய வழக்கத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் முதன்மை செயலர் சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ் பேசியபோது, “இயற்கை சார்ந்த அறிவை 2000 ஆண்டுகளாகவே தமிழ்நாடு பெற்றுள்ளது. சங்க இலக்கியத்தில் இயற்கை சார்ர்ந்த பாரம்பர்ய அறிவு அதிகம் பேசப்பட்டுள்ளது. தமிழ்நாடு யானைகள், புலிகளின் நாடு. இதைப்பற்றி இலக்கியங்களும் நிறைய பேசியுள்ளன. இதன் தொடர்ச்சியாகத்தான் தமிழ்நாட்டில் கோயில்கள் எழுப்பப்பட்டபோது, ஒவ்வொரு கோயிலிலும் நந்தவனங்கள் உருவாக்கப்பட்டன. அங்கே அரிய வகை மரங்கள் வளர்க்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் நந்தவனத்தில் 20 வகையான அரிய தாவரங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்தளவுக்கு தமிழ்நாடு உயிர்பன்மயத்தை போற்றி வந்துள்ளது.

இயற்கை சார்ந்த அறிவு, சுற்றுச்சூழல் மீதான அக்கறை, பார்வை எப்படி எனக்கு உருவானது என்றால், நான் கலெக்ட்ராக இருந்தபோதுதான். நீலகிரி மாவட்ட கலெக்ட்ராக இருந்தபோது சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகள், இயற்கை சார்ந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அடிக்கடி சந்திக்க நேரும். அப்படித்தான் இயற்கையைப் புரிந்துகொண்டேன். இப்போது வனத்துறையின் கீழ் 33 புதிய காடுகளை கண்டறிந்து வனத்தில் சேர்த்துள்ளோம். இதன்கீழ் 4,000 ஹெக்டேர் நிலங்கள் வன நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதேபோல தமிழ்நாட்டில் அகஸ்தியர் மலை, தென் காவேரி உள்ளிட்ட பல பல்லுயிர்கள் வாழும் இடங்களாக இருந்து வருகின்றன. இதைக் காக்க வேண்டும். பலவிதமான தாவரங்கள், உயிரினங்கள் வாழும் இடங்கள், வன நிலங்கள் ஆகியவற்றை சட்ட ரீதியாக பாதுகாக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள், வனத்தை அழிப்பவர்களிடமிருந்து பாதுகாக்க கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டிய தேவை எழுந்துள்ளது.
அதேபோன்று வனங்களில் வாழும் மக்கள் காடுகளை தெய்வமாக வணங்குகிறார்கள். அவர்களின் பாரம்பர்ய அறிவை பாதுகாக்க வேண்டும். எங்கேயாவது புலி இறந்தால் உடனடியாக தகவல் கொடுப்பவர்கள் மலைவாழ் மக்கள்தான். மலைவாழ் மக்களின் பங்களிப்பனால்தான் தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு இன்னும் சில பயிற்சிகளைக் கொடுத்து வளர்த்தெடுத்தால் காடுகளை பாதுகாப்பதில் நாம் பெரிய அளவுக்கு வளர முடியும். காடுகளைப் பாதுகாப்பதில் அரசுகளின் பங்கு முக்கியமானது. அதை அரசு உணர வேண்டும்” என்றார்.

தேசிய நிலைத்த கடலோர மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் பூர்வஜா ராமச்சந்திரன், சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பின் பிரதிநிதி யாஷ் வீர் பட்நகர் ஆகியோர் தொடக்க நிகழ்வில் பேசினர். மோங்கபே இந்தியா அமைப்பின் இயக்குநர் கோபி வாரியர் உள்ளிட்ட இந்திய பிரதிநிதிகள் இதில் பேச இருக்கின்றனர். நேபாள், பூடான், இலங்கை, ஈரான், துர்க்மேனிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசவுள்ளனர்.
மூன்று நாள்கள் நடைபெறும் இந்நிகழ்வில் ஒவ்வொரு நாட்டிலும் இயற்கை சார்ந்து செயலாற்ற வேண்டியவைகள், சுற்றுச்சூழல் அறிக்கைகள், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முன் உள்ள சவால்கள் ஆகியவற்றை பற்றி பேசப்பட உள்ளன. கடலூர் மாவட்டம், பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளுக்கு செல்லும் களப்பயணமும் நிகழ்வின் ஓர் அம்சமாக இடம் பெற உள்ளது.