மதுரை ஆதீனத்துக்கு எதிராக நித்தியானந்தா திடீர் வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக நித்தியானந்தா தாக்கல் செய்துள்ள மனுவுக்கு ஆதீனம் மற்றும் அறநிலையத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நித்தியானந்தா தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு: மதுரை ஆதீன மடத்தில் இளைய ஆதீனமாக என்னை கடந்த 2012-ல் அப்போதைய ஆதீனம் அருணகிரிநாதர் நியமனம் செய்தார். எனது நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் எனது நியமன அறிவிப்பை 2019-ல் ஆதீனம் திரும்ப பெற்றார். இதற்கு எதிரான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல் நலக்குறைவால் 2021 ஆகஸ்ட் 12-ல் காலமானார். முறைப்படி அவருக்கு பின் நான்தான் மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றிருக்க வேண்டும். அதற்கு பதிலாக ஒப்பந்தம், உயில் ஏதும் இல்லாமல் மதுரை ஆதீன மடத்தின் 293வது ஆதீனமாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை ஏற்க முடியாது.

என்னை இளைய ஆதீனமாக 2012-ல் அருணகிரிநாதர் அறிவித்தார். பின்னர் அந்த அறிவிப்பை அவரே திரும்ப பெற்றார். அதற்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் அருணாகிரிநாதர் காலமான நிலையில் அவருக்கு பதிலாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமியை எதிர்மனுதாரராக சேர்த்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கே.முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு குறித்து மதுரை ஆதீனம், அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.