இலங்கை அணிக்கு எதிரான போட்டியையும் மிக எளிதாக வென்று புள்ளிப்பட்டியலின் முதல் இடத்திற்கு முன்னேறியிருக்கிறது இந்திய அணி. அதுவும் அபாரமாக 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அசத்தியுள்ளது.
நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வியையே சந்திக்காமல் டாப் கியரில் பயணித்து வருகிறது. இந்திய அணியின் மீதான சந்தேகமும் பயமும் கூட இதுவாகத்தான் இருந்தது. 6 போட்டிகளில் வென்றுவிட்டார்கள். 7வது போட்டியில் எதுவும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுமோ என்கிற பயம் அனைவருக்குமே இருந்தது. ஆனால், இந்தப் போட்டியையும் எந்தச் சிரமமுமே இல்லாமல் இந்திய அணி கடந்திருக்கிறது.

வான்கடேவில் நடந்த இந்தப் போட்டியில் இலங்கை அணிதான் டாஸை வென்றிருந்தது. முதலில் பந்துவீசப்போவதாகவும் அறிவித்தார்கள். நல்ல ஃபார்மில் இருந்த ரோஹித் சர்மாவும் முதல் பந்தை பவுண்டரி அடித்துவிட்டு அடுத்த பந்திலேயே அவுட் ஆனார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் டக் அவுட் ஆகியிருந்தார். அதன்பிறகு அத்தனை போட்டிகளிலுமே வெற்றிக்கான முக்கியப் பங்களிப்பை அளித்திருந்தார். இந்தப் போட்டியில்தான் மீண்டும் சொதப்பியிருக்கிறார். இலங்கை ஆரம்பத்தில் கிடைத்த இந்த விக்கெட்டைப் பயன்படுத்தி அழுத்தம் ஏற்றி அடுத்தடுத்த விக்கெட்டுகளையும் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை.

காரணம் கோலியும் கில்லும். அவர்கள் அமைத்த கூட்டணி இந்திய அணியை பெரும் அரணாக நின்று காத்தது. இருவரும் இணைந்து ஏறக்குறைய 30 ஓவர்களுக்கு நிலைத்து நின்று 189 ரன்களைச் சேர்த்தனர்.
மதுஷங்கா ஆரம்பத்தில் கொஞ்சம் இவர்களைத் தடுமாறச் செய்தார். கோலிக்கு ஒன்றிரண்டு கேட்ச் வாய்ப்புகளையும் தவறவிட்டனர். இந்த வாய்ப்புகளையெல்லாம் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு இருவரும் பொறுப்புடன் பக்குவமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கோலி நிறைய டாட்கள் ஆடினார். ஆனால், அதை ஈடுகட்டும் வகையில் கவர்ஸிலும் நேராகவும் க்ளாஸான பவுண்டரிகளை அவ்வப்போது அடித்துக் கொண்டே இருந்தார்.
விராட் கோலி இன்னிங்ஸை முன்னிழுத்து செல்ல கில்லும் அவருக்கு ஒத்துழைத்து ரிஸ்க் எடுக்காமல் விக்கெட் அபாயமின்றி ஆடினார். இருவரும் அரைசதத்தைக் கடந்து ஒன்றாகவே சதத்தை நோக்கி முன்னேறினர்.

சுப்மன் கில் பெரிய எதிர்பார்ப்புடன் உலகக்கோப்பைக்குள் வந்தார். ஆனால், காய்ச்சலால் சில போட்டிகளில் அவரால் ஆட முடியவில்லை. ஆடிய போட்டிகளிலும் பெரிய இன்னிங்ஸ்களை ஆட முடியவில்லை. அந்த ஏக்கத்தை இன்று தீர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேமாதிரிதான் சச்சினின் சத சாதனையைச் சமன் செய்ய கோலிக்கு இன்னமும் ஒரு சதம்தான் தேவை என்ற நிலை.

அதை அந்த வான்கடே மைதானத்தில் புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் சச்சினின் சிலை முன்பாக நிகழ்த்திக் காட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், இரண்டு பேர் விஷயத்திலும் நினைத்தது நடக்கவில்லை. கில் 92 ரன்களிலும் கோலி 88 ரன்களிலும் என இருவரும் மதுஷங்காவின் பந்திலேயே அவுட் ஆகினர். இருவருக்குமே மதுஷங்கா வீசியது வழக்கத்தை விட வேகம் குறைந்த பந்துகள்தான். கில்லுக்கு வீசியது ஒரு ஸ்லோ பவுன்சர். கோலிக்கு ஒரு ஸ்லோ ஃபுல் டெலிவரியைத்தான் வீசினார். அதை கவர்ஸில் தட்டிவிட முயன்று கேட்ச் ஆனார் கோலி.
இன்றையப் போட்டியில் அவுட் ஆஃப் சிலபஸாக வந்து கலக்கியவர் ஸ்ரேயாஸ் ஐயர்தான். சரியாக அவருக்கு ஏற்ற மிடில் ஓவர்களில் க்ரீஸூக்கு வந்து சேர்ந்தார். தீக்சனா, ஹேமந்தா என இரண்டு ஸ்பின்னர்களையும் நன்றாக எதிர்கொண்டார்.

ஆச்சர்யம் என்னவெனில் இந்தப் போட்டியில் ரஜிதா, சமீரா, மதுஷங்கா என வேகப்பந்து வீச்சாளர்களையும் நன்றாக ஆடியிருந்தார். வழக்கமாக இடுப்புக்கு மேல் வரும் பந்துகளுக்கு திணறும் ஸ்ரேயாஸ் இந்த முறை அப்படி வந்த சில பந்துகளை மடக்கி லெக் சைடில் சிக்ஸரெல்லாம் அடித்திருந்தார். மிரட்டிய மதுஷங்காவின் ஓவரில் தொடர்ந்து மிரட்டலான சிக்ஸர்களை அடித்திருந்தார். அப்படி இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 6 சிக்ஸர்களை அடித்திருந்தார் ஸ்ரேயாஸ். அதில் ஒரு சிக்சர் 106 மீட்டரெல்லாம் சென்றிருந்தது. ஸ்ரேயாஸாவது சதமடிப்பார் எனப் பார்த்தால் அவரும் 82 ரன்களில் மதுஷங்கா ஒயிடாக வீசிய பந்தைத் துரத்தி சென்று கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கடைசியில் ஜடேஜா கொஞ்சம் அடிக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 357 ரன்களை அடித்திருந்தது.

இந்திய அணியின் பேட்டிங்கே அட்டகாசமாகத்தான் இருந்தது. ஆனால், பேட்டிங்கை விட பௌலிங் இன்னும் அதகளமாக இருந்தது. முதல் 10 ஓவர்களுக்குள் இந்திய அணி ஒட்டுமொத்த ஆட்டத்தையும் முடித்துவிட்டது. இந்திய அணியின் பந்துவீச்சையும் இலங்கையின் திணறலையும் பார்க்கையில் ஒரு டெஸ்ட் மேட்ச்சின் முதல் செஷனைப் பார்ப்பதைப் போன்றே இருந்தது.
பும்ராவும் சிராஜூம் முதல் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திக் கொடுத்தனர். பும்ரா, தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்திருந்தார். சிராஜூம் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்திருந்தார்.

பதும் நிஷாங்காவை பும்ரா வீழ்த்தினார். கருணாரத்னே, குஷால் மெண்டீஸ், சமரவிக்ரமா ஆகியோர் சிராஜின் பந்துக்கு இரையாகினர். ரோஹித் மூன்று ஸ்லிப்களை வைத்து அட்டாக் செய்தார். பும்ரா டைட்டாக ஸ்டம்பைக் குறிவைத்து வீசினார். பந்தும் 3 டிகிரிக்கும் மேல் ஸ்விங் ஆனது. சிராஜ் இன்னும் ஒருபடி மேலே சென்று ஸ்லெட்ஜ்ஜிங்கெல்லாம் செய்து அப்படியே ஒரு டெஸ்ட் போட்டிக்கான சூழலை உருவாக்கிவிட்டார்.
இவர்கள் இருவரும் முதல் 9 ஓவர்களை பகிர்ந்துகொள்ள 10வது ஓவரில்தான் ஷமி வந்தார். அவரும் வந்த வேகத்திலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் ஓவரையே விக்கெட் மெய்டனாக்கினார். அசலங்காவும் ஹேமந்தாவும் இவரிடம் வீழ்ந்தனர். 10 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 14 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. வெற்றி என்பதல்ல, போராட்டம் என்பதே கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இலங்கைக்கு மாறிப்போனது. இதன்பிறகு எல்லாமே சம்பிரதாயம்தான்.
தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய ஷமி 5 விக்கெட் ஹாலை எடுத்திருந்தார். இந்த உலகக்கோப்பையில் ஷமி எடுக்கும் இரண்டாவது 5 விக்கெட் ஹால் இது. மேலும், இதன் மூலம் உலகக்கோப்பையில் மொத்தமாக 45 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்காக உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பௌலர் எனும் சாதனையையும் செய்திருக்கிறார். இலங்கையை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.

இந்திய அணி தங்களின் வலிமையை இன்னும் அழுத்தமாக இந்தப் போட்டியில் வெளிக்காட்டியிருந்தது. விமர்சனங்களை சந்தித்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரும், சிராஜூம், கில்லும் ஃபார்முக்குத் திரும்பியிருக்கின்றனர். தோல்விக்கான அறிகுறியே தெரியாமல் இந்திய அணி ஆடி வருகிறது. இதே நிலை நாக் அவுட்டிலும் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.