Keraleeyam 2023: "அரசியலுக்கு வருவதற்கு முன்பு பினராயி விஜயனிடம் ஆலோசனை கேட்டேன்!" – கமல்ஹாசன்

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ம் தேதி கேரள மாநிலமும் உருவானது. கேரள மாநிலம் பிறந்த 68-ம் ஆண்டை `கேரளீயம் 2023′ என்ற பெயரில் கேரளா அரசு ஒரு வாரம் கொண்டாடி வருகிறது. கேரளீயம் விழாவின் தொடக்க விழா நவம்பர் 1-ம் தேதியான நேற்று கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்தது. முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, கமல்ஹாசன், நடிகை ஷோபனா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

திருவனந்தபுரத்தில் நடந்த கேரளீயம் 2023 தொடக்கவிழா

இதில் முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், “உலகம் முழுவதும் உள்ள கேரள மக்கள் கொண்டாடும் விதமாக இனி ஆண்டுதோறும் கேரளீயம் விழா கொண்டாடப்படும். சமூகம், அரசியல், கலாசாரத்தில் என எல்லாவற்றிலும் கேரளத்துக்கு எனத் தனித்துவம் உண்டு. இதை நாம் அனைவரும் உணராமல் உள்ளோம். அதனால் அந்தத் தனித்துவத்தை நாட்டுக்கும், உலகுக்கும் உணர்த்த நமக்கு முடியவில்லை. இது மாற வேண்டும். சுத்தம் தொடங்கிக் கலை வரை வித்தியாசமாக உள்ளோம் என்ற பெருமை உணர்வு இளம் தலைமுறையினருக்கு இருக்க வேண்டும். மீன்பிடி, சுற்றுலா, கல்வி, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் நாம் முன் மாதிரியாக விளங்குகிறோம். புதிய கேரளாவை, மாற்றம் ஏற்பட்ட கேரளாவை உலகுக்குக் காட்டவே கேரளீயம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறோம். இதன்மூலம் உலகம் முழுவதும் கேரளம் கவனிக்கப்படும். மிதித்துத் தாழ்த்தப்பட்டவரை வரவேற்கும் விழாவான மகாபலியுடன் சம்பந்தப்பட்ட ஓணம் பண்டிகை நமக்கான முதல் எடுத்துக்காட்டு. அனைத்து மத பண்டிகைகளையும் ஒன்றாகக் கொண்டாடுகிறோம். அரை நூற்றாண்டில் நாம் ஒரு நூற்றாண்டின் தூரத்தை ஓடிக்கடந்துள்ளோம்” என்றார் பெருமையாக!

இந்த விழாவில் நடிகர் மம்மூட்டி பேசுகையில், “அன்பிலும், நட்பிலும் நாம் உலகத்துக்கே முன்மாதிரியாக விளங்குகிறோம். நமக்கு அரசியல், மதம், சிந்தனை எல்லாம் வேறு வேறுதான். அதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு எல்லோரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் ஒன்றுசேரவேண்டும். நாம் மலையாளம் பேசக்கூடியவர்கள், வேட்டிக் கட்டக்கூடியவர்கள், நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். வித்தியாசங்களை மறந்து நாம் ஒன்றாக கனவு கண்டு, உலகத்துக்கு முன்னோடியாகச் செயல்படுவோம்” என்றார். 

கேரளீயம் விழாவில் கலந்துகொண்டவர்கள்

நடிகர் மோகன்லால் பேசுகையில், “கேரளாவின் பெருமையையும், மலையாள மொழியின் பெருமையையும் உலகுக்கு நினைவுபடுத்தும் விதமாக கேரள அரசு முதன் முதலாக கேரளீயம் விழா நடத்துகிறது. திருவனந்தபுரம் எனது சொந்த நகரம். இங்குள்ள முக்கு, மூலைகள் எல்லாம் எனக்கு நன்கு தெரியும். இங்குள்ள பழக்கவழக்கங்களும் எனக்கு நன்றாகத் தெரியும். வருங்கால கேரளம் எப்படி இருக்கவேண்டும் என்ற சிந்தனையை கேரளீயம் 2023 முன்வைத்துள்ளது. பேன் இந்தியா படங்கள் மலையாளத்தில் இன்னும் அதிகம் உருவாக வேண்டும். ரசிகர்களைப் பலப்படுத்தப் பயன்படும் இதுபோன்ற முயற்சிகளுக்கு பிலிம்பெடரேஷன் ஆஃப் இந்தியா முயற்சி எடுக்க வேண்டும். மாநில சினிமா அகாடமி போன்றவற்றை முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம் கேரளம் ஆகும்” என்றார்.

மேலும் மேடையில் வைத்து மம்மூட்டி, கமல்ஹாசன், ஷோபனா மற்றும் முதல்வர் பினராயி விஜயனுடன் சேர்ந்து மோகன்லால் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

கேரளீயம் விழா மேடையில் செல்பி எடுத்துக்கொண்ட நடிகர் மோகன்லால்

இதில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “என் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது கேரளம். ஏழு அல்லது எட்டு வயது இருக்கும் சமயத்தில் சேது மாதவன் இயக்கிய ‘கண்ணும் கரளும்’ என்ற மலையாள படத்தில் நடித்திருந்தேன். மலையாள சினிமா கேரள கலாசாரத்தை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. சினிமாவைக் குறித்து அறிந்துகொள்ளவும், சுய தகுதி ஏற்படுத்திக்கொள்ளவும் மலையாள சினிமா எனக்கு வாய்ப்பு வழங்கியது. 2017-ல் அரசியலுக்கு வருவதற்கு முன்பு கேரளாவுக்கு வந்து முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொண்டேன்.

உலகில் முதன்முதலாக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, கேரள அரசாகும். நாட்டுக்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது கேரளம். கலாசாரம், கல்வி, மருத்துவம், வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளில் கேரளத்துக்கும் தமிழகத்துக்கும் ஒற்றுமை உண்டு” என்றார்.

இதில் நடிகை ஷோபனா பேசுகையில், “‘மணிச்சித்திரத்தாழ்’ படத்துக்குப் பிறகு என்னை எல்லோரும் தமிழச்சி என அழைக்கிறீர்கள். ஆனால், என் சொந்த ஊர் திருவனந்தபுரம்தான். அனைவருக்கும் கேரளா பிறந்தநாள் வாழ்த்துகள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.