உச்சத்தில் அரசு Vs ஆளுநர்… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு – பின்னணி என்ன?!

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அதிமுக-வா அல்லது ஆளுநர் மாளிகையா என்று கேட்டால், பதில் சொல்பவர்கள் சில நிமிடங்களாவது குழம்பி விடுவார்கள். அந்த அளவுக்கு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான அதிகார மோதல் முற்றிக் கொண்டிருக்கிறது. திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் பதிப்பில் கூட அதனை வெளிக்காட்டியிருக்கிறார்கள். ஆளுநர் மாளிகை நுழைவாயில் இருந்து ஆர்.என்.ரவி எட்டிப் பார்ப்பதுபோலவும், அவரின் தலைக்கு மேலே பாஜக அலுவலகம் எனப் பெயர்ப்பலகை இருப்பதுபோலவும் ‘கார்ட்டூன் படம்’ நேற்றைய (02.11.2023) முரசொலியில் வெளியாகியிருக்கிறது.

சட்டமன்றத்தில் அரசு கொடுத்த உரையில் ஆளுநர் திருத்தம் செய்து வாசித்தது, அதை உடனடியாக தமிழக அரசு நீக்கியது, மசோதாக்களுக்கு கையெழுத்திட மறுப்பது, திராவிடம் – சனாதனம் குறித்த ஆளுநரின் கருத்துக்களால் சர்ச்சைகள் வெடித்தது என ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநர் ஆனதில் இருந்தே அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையில் முட்டல் மோதல் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

சட்டமன்றத்தில் ஆளுநர் ரவி

தற்போது, டி.என்.பி.எஸ்.சி தலைவராக முன்னாள் டி.ஜி.பி சைலேந்திர பாபுவை நியமிக்கக தமிழக அரசு எடுத்த முடிவுக்கு ஒப்புதல் தர மறுத்துவிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநர் மாளிகை முன்பு ரெளடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியதை ஒட்டி, ஆளுநர் மாளிகை வெளியிட்ட கருத்துக்கள் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை போலவே அமைந்திருந்தன. ஆளுநர் மாளிகையின் குற்றச்சாட்டுக்களுக்கு காவல்துறை சிசிடிவி ஆதாரங்களை வெளியிட்டும், அறிக்கைகளை கொடுத்தும் பதில் விளக்கம் கொடுத்தது. கருக்கா வினோத்தின் பின்னணியை அலசி ஆராய்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் பதில் கொடுத்தார். அதற்கு பா.ஜ.க தரப்பில் இருந்தும் தி.மு.க அரசுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தன் பங்குக்கு, ஆளுநர் மாளிகை பா.ஜ.க அலுவலகம் போல செயல்படுகிறது என நேரடியாகவே தாக்கிப் பேசினார். அதே வேகத்தில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அதன் அரசமைப்புச் சட்ட செயல்பாடுகளுக்கும் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார். சரியான காரணங்களை தெரிவிக்காமல் அரசு அனுப்பும் கோப்புகளை திருப்பி அனுப்புகிறார். மீண்டும் கோப்புகளை அனுப்பினாலும் ஒப்புதல் தர மறுக்கிறார். ஊழல் புகாரில் வழக்கு பதிவு செய்ய கூட அனுமதி தராமல் இழுத்தடிக்கிறார். அரசியல் சாசன பிரிவுகள் 200 மற்றும் 163-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தி உள்ளார். தமிழ்நாடு அரசு, நீட் விலக்கு மசோதா, பல்கலைக்கழக சட்டங்களை திருத்துவதற்கான மசோதா உள்ளிட்ட 12 மசோதாக்கள், 4 நடவடிக்கை உத்தரவுகள், 54 கைதிகளின் முன்கூட்டிய விடுதலை தொடர்பான கோப்புகள் உள்ளிட்டவை தமிழ்நாடு ஆளுநரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன” என கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை

ஒருபக்கம் ஆளுநருக்கு எதிராக சட்ட ரீதியான முன்னெடுப்புகளை திமுக அரசு தொடங்கியிருந்தாலும், ஆளுநரின் செயல்பாடுகளால் திமுக உள்ளூர மகிழ்ச்சியில்தான் இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இதுகுறித்து தி.மு.க உடன்பிறப்புகள் சிலரிடம் பேசும்போது, “ஆளுநரை தயவுசெய்து மாற்றி விடாதீர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது வெறும் மேடைப் பேச்சுக்காக அல்ல. வடக்கில் பா.ஜ.க-வின் வழக்கமான இந்துத்துவா அரசியலைப் பேசுவதை போல, தமிழ்நாட்டிலும் பேச நினைக்கிறார் ஆளுநர். அதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்ற புரிதல் கூட அவருக்கு இல்லை. அதை எடுத்துச் சொல்லவும் ஆளில்லை போல, பாவம். ஆளுநரின் பேச்சுக்கள், செயல்கள் எதையாவது மக்கள் ரசிக்கிறார்களா? கம்யூனிஸ்ட் மூத்த தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க ஒப்புதல் தராத ஒரு ஆளுநரை, தமிழ்நாட்டு மக்கள் எப்படி நல்லவிதமாக பார்ப்பார்கள்? தி.மு.க-வை எதிர்ப்பதாக நினைத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பகைத்துக்கொள்கிறார். எங்களுக்கு அண்ணாமலையும் ஒன்றுதான், ஆர்.என்.ரவியும் ஒன்றுதான். இருவரும் செய்யும் காமெடிகளை வைத்தே நாடாளுமன்றத் தேர்தலில் எளிமையாக வென்றுவிடுவோம்.” என்கின்றனர்.

ஆளுநருக்கும் அரசுக்கும் இடையிலான இந்த அதிகார மோதல் உச்ச நீதிமன்றத்தை எட்டியிருப்பது குறித்து பத்திரிகையாளர் ப்ரியனிடம் கேட்டோம். “அரசியல் சட்டத்தை முன்னோர்கள் வகுத்தபோது எதிர்காலத்தில் வரும் ஆளுநர்கள், ஆளும் அரசுக்கு ஒத்துழைத்து, மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இருப்பார்கள் என்று நம்பித்தான் நியமனப் பதவியாக ஆளுநர் பதவியை வைத்தார்கள். ஆளுநர் பதவி தொடர்பான விவாதம் வந்தபோது, முதல்வர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகவும், ஆளுநர் என்பவர் அரசின் முடிவுகளுக்கு ஒத்துழைப்பவராகவும் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தியவர் அம்பேத்கர். அரசு இயற்றும் மசோதாக்களை ஒப்புதல் அளிக்க வேண்டுமே தவிர, அதை பரிசீலிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. எந்த சட்டத்தை இயற்றினாலும் அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளுக்கு அரசாங்கம்தான் பொறுப்பாகும், ஆளுநர் பொறுப்பாக மாட்டார். நீதிமன்றங்கள் வேண்டுமானால் அதில் தலையிடலாம். ஆளுநருக்கு அத்தகைய அதிகாரம் இல்லை.

ப்ரியன்

ஆளுநர் அவருடைய கடமையை தட்டிக்கழிக்கிறார் என்பதால்தான், அரசு இப்போது நீதிமன்றத்திற்க்கு சென்றிருக்கிறது. எழுவர் விடுதலையிலும் ஆளுநர் முடிவெடுக்க மறுத்தார், நீதிமன்றம் முடிவெடுத்தது. சிவசேனா விஷயத்தில் சபாநாயகர் முடிவெடுக்க காலம் தாழ்த்தினார் என நீதிமன்றமே கால வரையறை நிர்ணயித்திருக்கிறது என்பதையெல்லாம் நினைவில்கொள்ள வேண்டும். பா.ஜ.க நபர் போல ஆளுநர் செயல்படுவது பா.ஜ.க-வுக்கே நல்லதில்லை. ராஜாஜி ஒருமுறை கூறியிருக்கிறார், `தீயணைப்பு நிலையத்தில் இருக்கும் உபகரணங்கள் வருடம் முழுக்க இருக்கும், ஆனால் தீப்பிடித்தால்தான் அதற்கு வேலை.’ அதுபோல ஆளும் அரசு அரசியல் சட்டத்தை மதிக்காமல், முரணான விஷயங்களை செய்தால், அப்போது ஆளுநர் அதில் தலையிட்டு, குடியரசுத் தலைவருக்கு அறிக்கை கொடுக்கலாம். மற்றபடி, ஆளுநரின் பணி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதுதான்.” என்றார்.

தமிழ்நாடு மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையில் அதிகார மோதல்போக்கு நிலவுகிறது. தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எதிராக, அம்மாநில் அரசு ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளது. தெலங்கானா, தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் ஆளுநர் ஆரிஃப் கானை எதிர்த்து அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதிகாரம் அரசுக்கா அல்லது ஆளுநருக்கா என்பதில் ஏற்கெனவே பல முக்கியத் தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கியிருக்கின்றன. ஆனால் ஆட்சிகள் மாறும்போது மோதல்களின் வடிவங்களும், எல்லைகளும்தான் மாறுகின்றனவே தவிர, முற்றுப்பெறவில்லை என்பதுதான் சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகால வரலாறு.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.