மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்… விதிமுறைகள் என்ன சொல்கிறது?

மியூச்சுவல் ஃபண்ட் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை இந்திய மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சங்கமான ஆம்ஃபி அறிவித்துள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் கடந்த சில ஆண்டுகளில் அதிகளவில் பிரபலமடைந்துள்ளன. குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை சேமிக்கவும், பெருக்கவும் மியூச்சுவல் ஃபண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் சில பிரிவுகளை சேர்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் அசாத்தியமான வருமானம் கொடுத்திருக்கின்றன. குறிப்பாக மிட்கேப், ஸ்மால்கேப் ஃபண்டுகள் கடந்த சில ஆண்டுகளில் சுமார் 40 சதவிகித வருமானம் கொடுத்திருக்கின்றன. இதனால் மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் மேலும் பிரபலம் அடைந்து வருகின்றன.

ஆம்ஃபி

இது ஒருபுறம் இருந்தாலும், சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் விளம்பரங்களில் முதலீட்டாளர்களை கவருவதற்காக மிக அதிக வருமானம் கிடைக்கும் என விளம்பரம் செய்கின்றன. சில மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும் எனவும் விளம்பரம் செய்கின்றன. முதலீட்டாளர்கள் தவறாக வழிநடத்தப்படுவதை தடுப்பதற்காக, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை ஆம்ஃபி விதித்துள்ளது.

இதன்படி, மியூச்சுவல் ஃபண்டுகள் தங்களது விளம்பரங்களில் 10 ஆண்டு கூட்டு வருமானத்தை மட்டுமே குறிப்பிட வேண்டும் என ஆம்ஃபி தெரிவித்துள்ளது. அதாவது, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு 10 ஆண்டு வருமானமாக 13 சதவிகிதத்துக்கு குறைவான வருமானத்தை மட்டுமே குறிப்பிட வேண்டும் என ஆம்ஃபி கூறுகிறது. ஏனெனில், 2013 ஜூன் 1-ம் தேதி முதல் 2023 மே 30-ம் தேதி வரையிலான 10 ஆண்டுகளில் சென்செக்ஸ் கொடுத்த வருமானம் 12.64 சதவிகிதமாகவும், நிஃப்டி கொடுத்த வருமானம் 12.93 சதவிகிதமாகவும் இருக்கிறது.

ஈக்விட்டி ஃபண்ட்

ஈக்விட்டியில் 75 சதவிகிதம் வரை முதலீடு செய்யும் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு சென்செக்ஸ் அடிப்படையில் 11.28 சதவிகிதம் அல்லது நிஃப்டி அடிப்படையில் 11.50 சதவிகிதம் வருமானமாக குறிப்பிட வேண்டும்.

பத்திரங்களில் முதலீடு செய்யக்கூடிய கடன் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கும் இந்த கட்டுப்பாடு உண்டு. கடன் பத்திரங்களில் 75 சதவிகிதம் வரை முதலீடு செய்யக்கூடிய ஃபண்டுகள் சென்செக்ஸ் பெஞ்ச்மார்க் அடிப்படையில் 8.56 சதவிகிதமும், நிஃப்டி பெஞ்ச்மார்க் அடிப்படையில் 8.63 சதவிகிதமும் வருமானமாக குறிப்பிட வேண்டும். 10 ஆண்டு அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கும் இதே விதிமுறை பொருந்தும்.

ஈக்விட்டி, கடன் இரண்டிலும் சரிசமமாக முதலீடு செய்யக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகள் பத்திர வருமானத்தையும் சேர்த்து சென்செக்ஸ் அடிப்படையில் 9.92 சதவிகிதமும், நிஃப்டி அடிப்படையில் 10.70 சதவிகிதமும் வருமானமாக குறிப்பிட வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட்

ஈக்விட்டி, கடன், தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்யக்கூடிய மல்டி அஸெட் ஃபண்டுகள் சென்செக்ஸ் அடிப்படையில் 9.8 சதவிகிதமும், நிஃப்டி அடிப்படையில் 9.92 சதவிகிதமும் வருமானமாக குறிப்பிட வேண்டும்.

ஆம்ஃபி பரிந்துரைக்கும் வருமானத்துக்கு மேல் அதிக வருமானத்தை மியூச்சுவல் ஃபண்டுகள் விளம்பரங்களில் குறிப்பிடக்கூடாது. இண்டெக்ஸ்களின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்த வருமான கட்டுப்பாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஆம்ஃபியால் ஆய்வு செய்யப்பட்டு தேவை இருப்பின் மாற்றங்கள் செய்யப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.