நமது நாட்டின் கோடீஸ்வரர்கள் தங்களது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அளித்து பிறருக்கு உதவிசெய்து வருகின்றனர். இப்படி தாங்கள் ஈட்டும் வருமானத்தில் அதிகமாக நன்கொடை வழங்கி வரும் இந்திய பணக்காரர்களின் பட்டியலை `EdelGive Hurun’ பவுண்டேஷன் வெளியிட்டுள்ளது.

2022- 23ம் நிதியாண்டில் டாப் 10 நன்கொடை வழங்கிய பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் ஹெச்.சி.எல்-ன் இணை நிறுவனரான ஷிவ் நாடார் இடம் பிடித்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் தோராயமாக 5.6 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி வருகிறார். மொத்தமாக 2,042 கோடி ரூபாயை வழங்கி பட்டியலில் முதலிடம் பிடித்து இருக்கிறார்.
ஷிவ் நாடாரைத் தொடர்ந்து விப்ரோவின் நிறுவனரான அசிம் பிரேம்ஜி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் 1,774 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளார்.
376 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்து முகேஷ் அம்பானி மூன்றாவது இடத்தையும், 287 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்து ஆதித்யா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
285 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்து ஐந்தாவது இடத்தில் கவுதம் அதானியும், 264 கோடி ரூபாயை அளித்து பஜாஜ் குடும்பம் ஆறாவது இடத்தையும், 241 கோடியை நன்கொடையாக அளித்து வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் ஏழாவது இடத்தையும், 189 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி இன்ஃபோசிஸ் நிறுவன இணை நிறுவனர் நந்தன் நிலேகேனி எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த சைரஸ் எஸ். பூனாவாலா மற்றும் அவரது மகன் ஆதார் பூனாவாலா 179 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி ஒன்பதாவது இடத்தையும், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீல்கேனியின் மனைவி ரோகினி நிலகேனி 170 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
நன்கொடையாளர்களின் பட்டியலில் டாப் 10 இடத்தில் இடம்பிடித்த ஒரே ஒரு பெண் என்ற பெருமையை 64 வயதான ரோகினி நிலகேனி பெற்றுள்ளார். அதோடு இவர் கடந்த நிதியாண்டில் டாப் 10 பெண்கள் நன்கொடையாளர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.