"கடவுள் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் இருந்தால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன்!" – கங்கனா ரணாவத்

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் நடித்து வெளி வந்த ‘தேஜஸ்’ என்ற படம் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதிகமான தியேட்டர்களில் டிக்கெட் விற்பனையாகாத காரணத்தால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

கங்கனா ரணாவத் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்திலிருந்து போட்டியிடத் திட்டமிட்டுக் காய் நகர்த்தி வருகிறார். தனது ‘தேஜஸ்’ படத்தை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு பிரத்யேகமான முறையில் திரையிட்டும் காட்டியிருக்கிறார்.

கங்கனா ரணாவத் | Kangana Ranaut

இதைத் தொடர்ந்து, கங்கனா துவாரகாவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் வழிபட்டார். சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் வந்த கங்கனா ரணாவத்திடம் ‘மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த அவர், “கடவுள் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் இருந்தால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன். 600 ஆண்டுக் காலப் போராட்டத்திற்குப் பிறகு அயோத்தியில் ராமர் சிலையை பா.ஜ.க. அரசு பிரதிஷ்டை செய்துள்ளது.

பா.ஜ.க அரசின் முயற்சியால் 600 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர்களாகிய நாம் இந்த நன்னாளைக் காண்கிறோம். சனாதன தர்மக் கொடி உலகம் முழுவதும் பறக்கவேண்டும்.

கங்கனா ரணாவத்

துவாரகாவில் எஞ்சியிருக்கும் பகுதியை மக்கள் பார்வையிட மத்திய அரசு வசதி செய்து கொடுக்கவேண்டும். இது ஒரு புனித நகரம். இங்கு அனைத்துமே அற்புதமாக இருக்கிறது. நான் எப்போதும் கிருஷ்ணரைக் காண துவாரகா வர முயற்சி செய்வேன். வேலையிலிருந்து எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் இங்கே வந்து விடுகிறேன். கடலுக்குள் மூழ்கிய துவாரகா நகரை மேலிருந்து பார்க்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

கங்கனா அடுத்ததாக ‘எமர்ஜென்சி’ என்ற படத்தில் இந்திரா காந்தியாக நடித்து இருக்கிறார். இதனை கங்கனாவே தயாரித்தும் இயக்கியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.