புதுடெல்லி: சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரதமர் மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அங்கு பொதுக் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: சுய மரியாதை மற்றும் நம்பிக்கையுடன் கூடிய ஏழை மக்களை காங்கிரஸ் வெறுக்கிறது. ஏழைகள் எப்போதும் தங்கள் முன் கையேந்த வேண்டும் எனவும், ஏழைகள் எப்போதும் ஏழைகளாக இருக்க வேணடும் எனவும் காங்கிரஸ் விரும்புகிறது. அதனால் மத்திய அரசு ஏழைகளுக்காக தொடங்கும் திட்டங்களை இங்குள்ள காங்கிரஸ் அரசு, தடுக்கிறது.
ஓபிசி பிரிவைச் சேர்ந்த பிரதமரையும், ஓபிசி பிரிவினரையும் காங்கிரஸ் இழிவாக பேசுகிறது. அதைக் கண்டு நான் அஞ்சவில்லை. ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் காங்கிரஸ் நிதி ஆதாயங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின் அநீதி மற்றும் ஊழலை பொறுத்துக் கொண்டீர்கள். இன்னும் 30 நாட்கள்தான் உள்ளது. அதன்பின் இந்த பிரச்சினையிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். இலவச ரேஷன் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள 80 கோடி மக்கள் பயனடைவர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இலவச ரேஷன் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கும் முடிவு சமீபத்திய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இது ஏழை மக்களுக்கான புத்தாண்டு பரிசு என கூறப்படுகிறது.
தேசிய உணவு பாதுகாப்புசட்டத்தின் கீழ், அந்தியோதயா அன்ன யோஜனா குடும்பங்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி அல்லது கோதுமை மானிய விலையில் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த2020-ம் ஆண்டு கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உணவு தானியத்தை இலவசமாக அளித்தது.
அந்த திட்டத்தை தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்துடன் மத்திய அரசு இணைத்தது. மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்வதால் 81.35 கோடி மக்கள் பயனடைவர்.