ரமேஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் அமீர் நடித்துள்ள ‘மாய வலை’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றிருந்தது.
அதில் பேசிய இயக்குநர் அமீர், ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பது குறித்தும் கார்த்தி, சூர்யாவுடனான இடைவெளி குறித்தும் மனம் திறந்து பேசினார்.
‘வாடிவாசல்’ குறித்துப் பேசியவர், ” ‘சூர்யா நடிக்கிற ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பதற்கு உங்களுக்கு ஓகேவா’ என்று வெற்றி என்னிடம் கேட்டார். நான் ‘ஓகே நடிக்கிறேன்’ என்றேன். அப்படித்தான் ‘வாடிவாசல்’ படத்தில் கமிட்டானேன். மற்றபடி சூர்யாவுடன் நடிப்பதற்கு எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

அவர் என்னுடைய கதாநாயகன். ‘மெளனம் பேசியதே’ படத்திலிருந்து சூர்யாவுடனும், அவரது குடும்பத்தினருடனும் நெருங்கிப் பழகி வருகிறேன். சூர்யா, கார்த்தி இருவரையும் வைத்து ‘மெளனம் பேசியதே’, ‘பருத்திவீரன்’ படங்களை இயக்கியுள்ளேன். தமிழ்த் திரையுலகில் அண்ணன், தம்பி இருவரையும் வைத்து இயக்கிய இயக்குநர் நான்.
ஆனால், ‘பருத்திவீரன்’ படத்திற்குப் பிறகு அவர்களுக்கும் எனக்குமான உறவில் இடைவெளி உண்டாகிவிட்டது. நான் அவர்களிடமிருந்து ஒதுங்கிவிட்டேன். இதில் நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை.
இதன் காரணமாகத்தான் வெற்றிமாறன் என்னிடம், ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க சம்மதமா என்று ஒரு தயக்கத்துடன் கேட்டார். சூர்யாவுடன் நடிப்பதற்கு எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நானும் ஓகே சொல்லிட்டேன். இதில் வேறெந்த உள் அர்த்தங்களும் இல்லை.

நடிகர் கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பான்’ இசை வெளியீட்டு விழாவில் கார்த்தியின் கார்த்தியின் வெற்றிப் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா, பா. ரஞ்சித், முத்தையா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். ஆனால், கார்த்தியின் முதல் படமான ‘பருத்திவீரன்’ படத்தை இயக்கிய ஆமீர், இவ்விழாவிற்கு வரவில்லை.
இந்நிலையில் இதுகுறித்தக் கேள்விக்குப் பதிலளித்த அமீர், “என்னைக் கூப்பிடாத இடத்திற்குச் சென்று எனக்குப் பழக்கமில்லை. என்னை அவ்விழாற்கு அழைத்ததாகக் கூறுகிறார்கள், என் முன்னாடி வந்து, ‘உங்களை அழைத்தேன் என்று’ சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். யாரும் என்னை அழைக்கவில்லை. அதனால், நானும் செல்லவில்லை. இதைப் பேசினால் தேவையில்லாத சர்ச்சையாக மாறிவிடும், வேண்டாம்” என்றார்.