DRS தொழில்நுட்பத்தை சாதகமாக பயன்படுத்துகிறதா இந்திய அணி…? – குவியும் குற்றச்சாட்டுகள்!

ICC World Cup 2023, DRS Technology: நடப்பு ஆடவர் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) இந்திய அணி விளையாடிய 8 லீக் போட்டியிலும் வெற்றி பெற்று வீழ்த்த முடியாத பலத்துடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. மேலும், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளதால் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வான்கடேவில் இந்தியா விளையாட இருப்பதும் உறுதியாகிவிட்டது. 12 ஆண்டுகளுக்கு பின் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா உள்ளது. நவ. 15, 19ஆம் தேதியை எதிர்நோக்கி இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

இந்திய அணி (Team India) நடப்பு தொடரில் சிறிய அணிகளை மட்டுமின்றி ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பெரு அணிகளையும் எந்த சிரமுமின்றி எளிதாக வென்றது குறிப்பிட்டாக வேண்டும். சொந்த மண்ணில் இந்திய அணி தனது ஆதிக்கத்தை வெளிக்காட்டினாலும், பேட்டிங், வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு என அனைத்து பிரிவிலும் மற்ற அணிகளையும் அடக்கி ஆள்கிறது. இந்திய அணியின் இத்தகைய வெற்றி சில பேருக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

டிஆர்எஸ் தொழில்நுட்பம் (DRS Technology) மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளும், புகார்களும் தொடர் தொடங்கியதில் இருந்தே வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தியா – தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான நேற்றைய போட்டிக்கு பலரும் கடுமையான குற்றச்சாட்டை சமூக வலைதளங்களில் முன்வைத்து வருகின்றனர். அதில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராஸா, இந்தியா தனது வெற்றிக்காக டிஆர்எஸ் தொழில்நுட்பத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்வதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். 

இதில், கிளாசென் ஜடேஜா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் டிஆர்எஸ் மூலம் அவுட்டானது தற்போது சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அது குறித்து ஹசன் ராஸா கூறுகையில்,”ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார் மற்றும் சிறந்த பந்துவீச்சுடன் நிறைவு செய்தார். டிஆர்எஸ் எடுக்கப்படும் தொழில்நுட்பத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அதில் வான் டெர் டஸ்ஸன் (ஆனால் ஹென்ரிச் கிளாசென்) பேட்டிங் செய்தார் மற்றும் பந்து லெக் ஸ்டம்பில் பிட்ச் செய்யப்பட்ட பிறகு மிடில் ஸ்டம்பைத் தாக்கியது. அது எப்படி சாத்தியம். 

இம்பாக்ட் இன் லைனில் இருந்தது, ஆனால் பந்து லெக் ஸ்டம்பை நோக்கி சென்றது. எல்லோரையும் போலவே நானும் என் கருத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இதுபோன்ற விஷயங்கள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று நான் சொல்கிறேன். டிஆர்எஸ் சிலருக்கு சாதகமாக மாற்றப்படுகிறது, அது தெளிவாகத் தெரிகிறது” என்றார். மேலும், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் மட்டும் இந்தியா ஆதிக்கம் செலுத்துவது ஏன் என்றும் நடப்பு தொடரில் இந்திய அணிக்கு எதிராக மட்டும் ஏன் மற்ற அணிகள் சுமாராக விளையாடுகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.