IND vs SA: டிஜிட்டல் உலகில் புதிய சாதனை படைத்த இந்தியா vs சவுத்ஆப்பிரிக்கா போட்டி!

IND vs SA: தற்போது நடைபெற்று வரும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 போட்டிகள், இணையத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மூலம் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.  மேலும், மொபைல் பயனர்கள் உலக கோப்பை போட்டிகளை இலவசமாக பார்க்க முடியும்.  இந்நிலையில், கிரிக்கெட் போட்டியை அதிக நபர்கள் பார்த்ததில் புதிய உச்சபட்சம் ஏற்பட்டுள்ளது.  ஒரு புதிய மைல்கல்லாக அமைத்துள்ளது இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா இடையேயான போட்டி.  ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மோதலின் போது சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.  இந்த போட்டியை ​​டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 44 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.  

கடந்த மாதம், அக்டோபர் 22 அன்று நடந்த இந்தியா-நியூசிலாந்து போட்டி 43 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்தது, அக்டோபர் 14 அன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் அதிகபட்சமாக 35 மில்லியனைத் தாண்டியது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மொபைல் பயனர்களுக்கு 2023 ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இலவச அணுகலை வழங்குவதாக அறிவித்தது.  இந்நிலையில், இந்த நடவடிக்கை நிறுவனத்திற்கு புதிய மைல்கல்லை ஏற்படுத்தி உள்ளது.  கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இறுதிப் போட்டி 32 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு ஜியோசினிமா ஒரு சாதனையைப் படைத்து இருந்தது.

மொபைல் பயனர்களுக்கு இலவச அணுகல், அவர்கள் எங்கு இருந்து வேண்டுமானாலும் பார்த்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தி உள்ளதால் இந்த ஸ்ட்ரீமிங் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக டிஜிட்டல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.  ஸ்மார்ட்போன் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் சாதனைகள் நாளுக்கு நாள் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விளம்பரங்கள் இல்லாமல் போட்டிகளை பார்க்க சந்தா வசதியையும் வைத்துள்ளது.  டிஜிட்டலை தாண்டி தொலைக்காட்சியிலும் உலக கோப்பை சாதனை படைத்து வருகிறது.  BARC தரவுகளின்படி, இந்தியா vs நியூசிலாந்து போட்டி ஸ்டார் சேனல்களிலும் தூர்தர்ஷனிலும் ஒரே நேரத்தில் 80 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்தது, இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியின் போது 75.5 மில்லியனாக இருந்தது.

உலகக் கோப்பையின் நேரடி ஒளிபரப்புக்கான மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை முதல் 26 போட்டிகளுக்கு 400 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டியுள்ளதாக டிஸ்னி ஸ்டார் கூறியுள்ளது. BARC தரவு டிஸ்னி ஸ்டார் சேனல்களுக்கான தரவு, அகில இந்திய 2+ பார்வையாளர்களுக்கு 310 மில்லியன் என்று தெரிவிக்கிறது.  உலக கோப்பை போட்டியில் இந்தியா 8 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.  லீக் போட்டியில் கடைசியாக நெதர்லாந்து அணியுடன் விளையாட உள்ளது.  அதன் பிறகு அரையிறுதி மற்றும் இறுதி போட்டி மட்டுமே.  எப்படியும் இந்த உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என்ற நம்பிக்கையில் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.