நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் இலங்கை அணி நிறையத் தோல்விகளைச் சந்தித்துள்ளதால் அதன் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியிருக்கிறது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்திருக்கிறது.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை மொத்தம் 7 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்துடனான இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதிபெறுவது சிக்கலாகி இருக்கிறது. இலங்கை அணியின் பந்து வீச்சு மோசமாக உள்ளது போன்ற விமர்சனங்களும் எழுந்த வண்ணமிருந்தன. குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில், பேட்டிங்கும் சொதப்பி, 302 ரன்கள் வித்தியாசத்தில் படு மோசமான தோல்வியைச் சந்தித்திருந்தது அந்த அணி.

இந்தப் படுதோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் அந்த நாட்டின் கிரிக்கெட் அமைப்பு மற்றும் அரசு மீது கடும் விமர்சனத்தை முன் வைத்தனர். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து 7 உறுப்பினர்கள் கொண்ட தற்காலிகக் குழுவை அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கா அறிவித்திருக்கிறார்.

தற்பொழுது 1996-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா மற்றும் ஓய்வு பெற்ற சில முன்னாள் நீதிபதிகளை வைத்து தற்காலிகமாக இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. உலகக் கோப்பை முடிந்த பிறகு நிரந்தரமான கிரிக்கெட் வாரியம் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.