`நாயகன்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம், கமல் இணைந்திருக்கும் திரைப்படத்திற்கு `Thug life’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
மல்டி ஸ்டாரராக உருவாகும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான் ஆகியோரும் இணைந்திருக்கின்றனர். மணிரத்னத்தின் ஆஸ்தான தொழில்நுட்ப கலைஞர்களான எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இதில் கைகோர்த்துள்ளனர். ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவு மாஸ்டர்கள் வடிவமைக்கின்றனர்.
இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கமல் தன்னை, ‘ரங்கராய சக்திவேல் நாயக்கர்’ என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அதன்பிறகு, ‘காலன் என்னைத் தேடி வந்தது இது முதல் முறையல்ல, கடைசி முறையும் இல்லை’ என்ற வசனத்துடன் எதிரிகளை ஜப்பானிய சண்டைக் கலையால் துவம்சம் செய்கிறார்.
இதில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது அவரது பெயர்தான். இதே ‘சக்திவேல் நாயக்கர்’ எனும் பெயர்தான் ‘நாயகன்’ படத்தில் கமலின் பெயர். படத்தில் அவரின் பேரனின் பெயரும் அதுதான். இதையெல்லாம் கனெக்ட் செய்துபார்த்தால் ‘Thug Life’-ல் வரும் கமல், ‘நாயகன்’ பட வேலு நாயக்கரின் பேரனாக இருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஏற்றார் போலப் படப் பூஜைக்கான அறிவிப்பு வீடியோவிலுமே ‘நாயகன்’ படம் இடம்பெற்றிருக்கும். அந்தப் படத்திலிருந்துதான் வீடியோவே ஆரம்பமாகும்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இப்படம் ‘நாயகன்’ படத்தின் யூனிவர்ஸில் இடம்பெறலாம் என்பதாகவே தெரிகிறது. கமலும் இந்த புரொமோவில் தன் பெயரை இரண்டு முறை அழுத்திச் சொல்வதால் அதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்பதே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
எது எப்படியோ 35 வருடங்களுக்குப் பின்னர் இணைந்திருக்கும் கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.