ஐசிசி ஒருநாள் தரவரிசை; பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர் வரிசையில் இந்திய வீரர்கள் முதலிடத்திற்கு முன்னேற்றம்!

துபாய்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமை பின்னுக்கு தள்ளி இந்திய இளம் வீரர் சுப்மன் கில் முதலிடத்தை பிடித்துள்ளார். சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கில் 830 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

மேலும் ஒருநாள் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த 4-வது இந்திய வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். இதற்கு முன்னர் இந்தியாவின் சச்சின், தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் முதலிடத்தை பிடித்துள்ளனர். பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்களில் விராட் கோலி 4-வது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 6-வது இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சு தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் சாஹின் அப்ரிடியை பின்னுக்கு தள்ளி இந்திய வீரர் சிராஜ் முதலிடத்தை பிடித்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் சிராஜ் 709 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர்களில் குல்தீப் யாதவ் 4-வது இடத்திலும், பும்ரா 8-வது இடத்திலும், முகமது ஷமி 10-வது இடத்திலும் உள்ளனர்.

ஆல் ரவுண்டர் தரவரிசையில் வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார். ஆல் ரவுண்டர் தரவரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக மேக்ஸ்வெல் கிடுகிடுவென முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். இதில் இந்திய வீரர் ஜடேஜா 10-வது இடத்தில் உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.