திருச்சி ஸ்ரீரங்கத்தில் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, திருவானைக்காவல் நாலு கால் மண்டபத்தில் இருந்து துவங்கி, ரயில்வே பாலம், தேவி தியேட்டர் வழியாக வந்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக நிறைவு செய்தார்.
அப்போது உரையாற்றிய அண்ணாமலை, “புண்ணிய பூமியான ஸ்ரீரங்கத்தில் நூறாவது தொகுதி யாத்திரை அரங்கநாதர் ஆலயம் முன்பாக நடைபெறுவது. வரும் 2026 -ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட யாத்திரை இது. தமிழகத்தில் சைவமும், வைணவமும் ஒற்றுமையோடு இருப்பதை பறைசாற்றும் வகையில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி சைவ ஸ்தலத்தில் தொடங்கி 108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் வைணவ திருத்தலத்தில் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் சனாதன தர்மத்தை ஒழித்து விடுவோம், இந்து தர்மத்தை பின்பற்றக்கூடிய மக்களை சனாதன தர்மத்தை பின்பற்ற விடமாட்டோம் என தி.மு.க பேசி வருகிறது.

13-ம் நூற்றாண்டில் மாலிக் காபூர் ஒவ்வொரு இந்து கோயிலாக கொள்ளையடித்து இறுதியில் ஸ்ரீரங்கத்தில் கொள்ளையடிக்க முயன்ற போது ஏறத்தாழ 12 ஆயிரம் வைணவர்கள் தங்கள் ரத்தத்தை சிந்தி பெருமாளை காப்பாற்றினர். மாலிக் காபூர் ஒழிக்க முடியாத சனாதனத்தை, உதயநிதி ஸ்டாலினால் ஒழித்து கட்ட முடியுமா?. 1801 ஜுன் 16-ம் தேதி அப்போதைய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஜம்பு தீவு பிரகடனத்தை மருது சகோதரர்கள் ஸ்ரீரங்கம் கோவிலில் ஒட்டினர். எவ்வாறு மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார்களோ, அதுபோல தி.மு.க-விற்கு எதிராக நாம் சேர்ந்து போராட வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.
தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 1967 -ல் ராஜகோபுரம் எதிரே, `கடவுளை நம்புகிறவன் முட்டாள், கடவுளை நம்புகிறவன் ஏமாளி’ என்ற வாசகம் பொருந்திய பலகையை வைத்துள்ளனர். ஏதோ ஒரு மிகப்பெரிய சாதனையை செய்தது போல் தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து கோயில்களிலும் இதுபோன்ற பலகையை வைத்துள்ளனர். இந்துக்களின் பாதுகாவலன் எனக் கூறும் முதல்வர் இதுபோன்ற பலகைகளை அனுமதித்திருப்பது இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது. ஆயினும் இந்துக்களாகிய நாம் அமைதியான வழியில் வாழ்ந்து வருகிறோம். இந்துக்களின் நண்பன் என்று கூறி வாக்குகளை வாங்கி மத சாயம் பூசி தமிழகத்தில் சனாதன தர்மம் ஒழிவதற்கு தமிழகத்தில் கூடிய அனைத்து கட்சிகளுமே காரணம். இதனை கடந்த 70 ஆண்டு காலமாக பார்த்து வருகிறோம். ஜம்பு தீவு பிரகடனம் போல் பா.ஜ.க சார்பில் ஒரு பிரகடனத்தை அறிவிக்கிறோம்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல் நொடியிலேயே இதுபோன்ற கடவுள் மறுப்பு பலகைகள் அகற்றப்படும். அதற்கு பதிலாக திருவள்ளுவர், ஆழ்வார்கள் நாயன்மார்கள் சிலை வைக்கப்படும். அதேபோல, இந்து சமய அறநிலைத்துறை என்கிற துறை இருக்காது.

சனாதன தர்மத்தில் நாங்கள் கை வைக்கவில்லை என கூறும் தி.மு.க, ஸ்ரீரங்கம் 51 வது ஜீயர் பட்டத்திற்கு தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என ஏதோ எழுத்தர் பணிக்கு ஆள் தேர்வு செய்வது போல விளம்பரம் செய்கிறது. சனாதன தர்மம் குறித்து நீதிமன்றம் பேசுகிறது. சனாதன தர்மத்தை ஒழிப்போம் என மாநாட்டிலே பங்குபெற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மீது எவ்வித நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. தமிழக காவல்துறை தனது கண்ணியத்தை இழந்து இருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு தமிழக உயர் நீதிமன்றம் இதனை கண்டித்துள்ளது. தமிழக காவல்துறையும் ஆட்சியாளர்களும் ஒன்றாக பிணைந்து இருக்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வு அரசியல் மாற்றம்தான். வன்முறை இதற்கு தீர்வாகாது. அரசியலின் வழி ஜனநாயகத்தின் வழியில் எழுச்சியாளர்களாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பா.ஜ.க-வின் தேவை தமிழகத்திற்கு மிக அதிகமாக உள்ளது.
எனவே வரும் 2026 -ம் ஆண்டு நடைபெறும் தேர்தலின் போது, பாஜக-வை மக்களாகிய நீங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும். அதற்கான காரணம் அடுத்த 20 ஆண்டுகள் தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க கூடிய சக்தியாக பா.ஜ.க உள்ளது. பா.ஜ.க இந்துக்களுக்கான கட்சி மட்டுமல்ல. எந்த மதத்திற்கும் எதிரான கட்சியும் அல்ல, இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் ஒரு பிரச்னை வந்தாலும் கூட முதலில் குரல் கொடுக்கும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. ஏதாவது வீட்டில் கொள்ளை நடந்தால் நடவடிக்கை எடுக்காத காவல்துறை, பா.ஜ.க சார்பில் கொடிக்கம்பம் நடப்படுகிறது என்றால் ஒட்டுமொத்த காவல் துறையும் அந்த வீட்டில் முன்னால் நிற்கிறது. நாட்டில் பல்வேறு பிரச்னைகள் இருக்கும் சூழலில் அதையெல்லாம் கண்டு கொள்ளாத காவல்துறை கொடிக்கம்ப பிரச்னைக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கிறது. ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தனது தொகுதி மக்களின் பிரச்னையை கூட கண்டுகொள்ளாமல், கரூரில் கல் குவாரி நடத்தி வருகிறார். விதிகளை மீறி செயல்பட்டதால் அவர் குவாரிக்கு 24 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள பில்கேட்ஸை மிஞ்சும் பணக்காரராக தி.மு.க அமைச்சர் கே.என் நேரு உள்ளார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வண்டவாளம், தண்டவாளங்களை நாளை (இன்று) திருச்சியில் வெளியிடுவேன். பள்ளிக்கல்வித்துறை சார்பில் 30 மாதங்களாக என்ன செய்தார் என்பதை பற்றி நாளை திருச்சியில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். வரும் 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் முதல் கைது அண்ணாமலை தான் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். ஏன் அதுவரை காத்திருக்க வேண்டும்?. இப்போதே கைது செய்யுங்கள். கடந்த 1974 – ம் ஆண்டு கர்நாடகத்துடன் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு தற்போது காவிரியில் தண்ணீர் வரவில்லை என காவிரி தண்ணீரை வைத்து தி.மு.க அரசியல் செய்கிறது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.