பிஹாரில் எஸ்சி, எஸ்டி பிரிவில் 42 சதவீதம் பேர் ஏழைகள்: ஜாதிவாரி கணக்கெடுப்பில் தகவல்

பாட்னா: பிஹாரில் எஸ்சி, எஸ்டி குடும்பங்களில் 42% குடும்பங்கள் ஏழ்மையில் வாழ்கின்றன என்று ஜாதிவாரி கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிஹாரில் ஆட்சி நடத்தும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய தளம் கூட்டணி அரசு சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. இதன் முதல்கட்ட முடிவுகள் கடந்த மாதம் 2-ம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி பிஹாரில் 63.14% பேர் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பொதுப் பிரிவினர் 15.52%,தாழ்த்தப்பட்டோர் 19.65%, பழங்குடியினர் 1.69% பேர் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் ஜாதிவாரி கணக்கெடுப்பின் முழு விவரம் சட்டப்பேரவையில் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

பிஹார் குடும்பங்களில் 34.13% குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ.6,000 ஆகவும் 29.61% குடும்பங்களின் சராசரி மாத வருவாய் ரூ.10,000 ஆகவும் உள்ளது. 28% குடும்பங்களின் சராசரி மாத வருவாய் ரூ.10,000 முதல் ரூ.50,000 ஆக இருக்கிறது. 4% குடும்பங்களில் மட்டுமே சராசரி மாத வருவாய் ரூ.50,000-க்கு அதிகமாக இருக்கிறது.

ஜாதிவாரியாக கணக்கிட்டால் தாழ்த்தப்பட்ட (எஸ்சி) பிரிவில் 42.93% குடும்பங்களும், பழங்குடி (எஸ்டி) பிரிவில் 42.7% குடும்பங்களும் ஏழ்மையில் வாழ்கின்றன.பிற்படுத்தப்பட்ட (பிசி) பிரிவில்33.16% குடும்பங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட (எம்பிசி) பிரிவில்33.58% குடும்பங்களும், பொதுப்பிரிவில் 25.09% குடும்பங்களும் ஏழ்மையில் உள்ளன.

மாநில மக்கள் தொகையில் 50 லட்சம் பேர் வெளிமாநிலம், வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். பிஹாரின் ஒட்டுமொத்த கல்வியறிவு 79.7 சதவீதமாக உள்ளது.

பொதுப் பிரிவை சேர்ந்த 6 லட்சம் பேர் அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இதில் மிக அதிகபட்சமாக காயஸ்தர்சமூகத்தினர் 6.68% பேர் அரசு பணிகளில் உள்ளனர். பூமிகார் பிராமணர் சமூகத்தினர் 4.99% பேர், ராஜபுத்திர சமூகத்தினர் 3.81% பேர், பிராமணர்கள் 3.6% பேர் அரசு பணிகளில் உள்ளனர்.

இதேபோல முஸ்லிம்களில் உயர் வகுப்பினராகக் கருதப்படும் ஷேக், பதான், சயீது சமூகங்களை சேர்ந்தவர்கள் அரசு பணிகளில் கணிசமாக உள்ளனர்.

இடஒதுக்கீடு 65% ஆக உயரும்: பிற்படுத்தப்பட்டோரில் குர்மிசமூகத்தினர் 3.11% பேர், குஷ்வாகா சமூகத்தினர் 2.04% பேர், யாதவ சமூகத்தினர் 1.55% பேர் மட்டுமே அரசு பணிகளில் உள்ளனர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் முதல்வர் நிதிஷ் குமார் கூறும்போது, ‘‘பிஹார்மாநிலத்தில் எஸ்சி, எஸ்டி, மற்றும்ஓபிசி இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு சேராது. மாற்றியமைக்கப்பட்ட இடஒதுக்கீட்டின் படி எஸ்சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 20 சதவீதமாகவும், ஓபிசி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்(இபிசி) ஆகியோருக்கான இடஒதுக்கீடு 30 சதவீதத்திலிரு்நது 43 சதவீதமாக உயர்த்தப்படும்.

எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 2 சதவீதமாக இருக்கும். இந்த மாற்றங்களை இந்த கூட்டத்தொடரிலேயே அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.