திருமணமாகி, சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற பல பெண்களுக்கும் வருகிற ஒரு பிரச்னை பெண்ணுறுப்பு தளர்வு. இது தொடர்பான கேஸ் ஹிஸ்டரியைத்தான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பகிர்கிறார்.
”அவர்கள் தம்பதிகளாக என் மருத்துவமனைக்கு வந்தார்கள். விசாரித்ததில், பெண்ணுறுப்பு தளர்வு பிரச்னையை சரி செய்வதற்காக வந்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. பத்து வருடங்களுக்கு முன்பு வரைக்கும், ரொம்பவும் அரிதாகத்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கேட்டு வருவார்கள். தற்போது, தாம்பத்திய உறவு பற்றிய விழிப்புணர்வு பலருக்கும் வந்துவிட்டதால், பெண்ணுறுப்பு தளர்வு ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்க பலரும் வருகிறார்கள். இது ரொம்பவும் நல்ல விஷயம். சில நேரங்களில் கணவர் மட்டும் வந்து ஆலோசனை கேட்டுச் செல்வார். சில நேரங்களில் கணவனும் மனைவியும் சேர்ந்தே வருவார்கள்.

‘நார்மல் டெலிவரி நடந்துச்சுன்னு சந்தோஷமா இருந்தோம் டாக்டர். ஆனா, இப்போ என் வொயிஃபோட பிரைவேட் பார்ட் ரொம்பவும் லூஸாகிடுச்சு. ரெண்டு பேருக்குமே ரிலேஷன்ஷிப்ல எந்தத் திருப்தியும் கிடைக்க மாட்டேங்குது’ என்றார் கணவர்.
மனைவியிடம் பேசுகையில், சுகப்பிரசவமாகும்போது சிசு வெளிவர முடியாமல் நின்றதால் அவருடைய பிறப்புறுப்பில் சிறிதாக கட் செய்து தையல் போட்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. குழந்தை வெளியேறும் வழி தையல் போட முடியாதபடி மோசமாகக் கிழிந்துவிடலாம் என்பதால், இப்படிச் செய்வார்கள். தவிர, நீண்ட நேரம் பெண்ணுறுப்பின் வாயிலிலேயே சிசு இருந்தால், அந்த இடத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, சிறுநீர்ப்பைக்கும் பெண்ணுறுப்புக்கும் இடையில் ஒரு துவாரம் வந்துவிடும். இதை Vesicovaginal Fistula என்போம். இதனால், சிறுநீர்ப்பையில் இருக்கிற சிறுநீர், பெண்ணுறுப்பு வழியாக வழிந்துகொண்டே இருக்கும். இதற்கு சரியான சிகிச்சை எடுக்கவில்லையென்றால், பழைய நிலைக்குத் திரும்பாமலே போய்விடலாம்.
பெண்ணுறுப்பு எலாஸ்டிக் தன்மை கொண்டது என்பதால், சுகப்பிரசவமானதும் பழைய நிலைக்கே திரும்பி விடும். சிலருக்கு மட்டும் தளர்ந்த நிலையிலேயே இருந்துவிடும். இவர்கள், பெண்ணுறுப்பை இறுக்கி, தளர்த்தும் கெகல் எக்சர்சைஸை செய்தாலே சரியாகி விடும். டாக்டர் கெகல் என்பவர், சிறுநீர்க்கசிவுக்காக சரியாக சொல்லிக்கொடுத்த பயிற்சி இது. பின்னாளில் இது பெண்ணுறுப்பையும், ஆசன வாய் தசையையும் இறுக்கமாக்கும் என்பது தெரிந்தது. உறவின்போது, மனைவி பெண்ணுறுப்பை இறுக்கமாக்கினால்கூட இருவருக்கும் தளர்வாக இருக்கிற உணர்வு வராது.

பெண்ணுறுப்பின் தசைகளைத் தடிமனாக்கும் ஜெல்லை மருத்துவரின் ஆலோசனையோடு பயன்படுத்தலாம். செக்ஸ் செய்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் இந்த ஜெல்லை தடவிக்கொண்டால், அந்தப் பகுதியின் சருமம் திக்காகி விடும். இதனால், உறவுகொள்கையில் இறுக்கமான உணர்வு கிடைக்கும். ரொம்பவும் தளர்ந்திருந்தால், அந்தப் பகுதி தசையில் சிறிது கட் செய்து அறுவை சிகிச்சை மூலம் இறுக்கமாக்கலாம்” என்கிறார் டாக்டர் காமராஜ்.