தமிழகம், புதுச்சேரி உட்பட 10 மாநிலங்களில் என்ஐஏ தீவிர சோதனை: சென்னையில் ஊடுருவிய வங்கதேசத்தினர் கைது

சென்னை: தமிழகம், புதுச்சேரி, தெலங்கானா உட்பட நாடு முழுவதும் 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சுமார் 50 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில், வடமாநில தொழிலாளர்கள்போல தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர் 3 பேர்கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு போலி அடையாள அட்டை தயாரித்து கொடுத்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தமிழகம், புதுச்சேரி உட்பட நாட்டின் 10 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை பள்ளிக்கரணை, மறைமலை நகர், படப்பை உள்ளிட்ட இடங்களில் தேநீர், குளிர்பான கடைகள், வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த இடங்களில் புகுந்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு வேலை செய்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், படப்பை பகுதியில் சகாபுதீன் என்பவரும், மறைமலை நகர் பகுதியில் முன்னா மற்றும் அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள். ஆனால், திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதுபோல போலியாக ஆதார் அட்டை தயாரிக்கப்பட்டு, இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனர் என்று தெரியவந்தது. போலி ஆவணம்தயாரித்து கொடுத்தது தொடர்பாக சாஹித் உஷான் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதுபோல இன்னும் எத்தனை பேர் தமிழகத்துக்குள் ஊடுருவி உள்ளனர், இவர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவர்களா என்பது உட்பட பல்வேறு கோணங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் ஆவணங்கள் ஆய்வு: வங்கதேச இளைஞர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி தங்கிஇருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அருள்புரம், அறிவொளி நகர், அல்லாளபுரம், திருப்பூர் குமார் நகர், வளையங்காடு பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு பணியாற்றும் கொல்கத்தாமாநில தொழிலாளர்களின் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

புதுச்சேரியில் இளைஞர் கைது: புதுச்சேரி எல்லை பிள்ளைச்சாவடி பகுதி 100 அடி சாலையில் உள்ள குடோனில் தங்கியிருந்த எஸ்.கே.பாபு (26) என்ற கொல்கத்தா இளைஞரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது ஐபோன் மற்றும்சில ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் அவரை கைது செய்து, கோரிமேட்டில் உள்ள என்ஐஏ அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். வெளிநாடுகளில் இருந்து யாரேனும் ஊடுருவி உள்ளனரா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் யாரேனும் கொத்தடிமையாக விற்பனை செய்யப்பட்டுள்ளனரா, வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என்று தீவிரமாக விசாரித்தனர்.

ஜம்முவில் நடந்த சோதனையில் ஜாபர் ஆலம் என்பவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் தப்பிவிட்டார்.

‘‘சட்டவிரோத ஊடுருவல் தொடர்பாக தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், ஹரியாணா, மேற்குவங்கம், அசாம், திரிபுரா ஆகிய 8 மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி ஆகிய 2 யூனியன் பிரதேசங்களில் சோதனை நடந்து வருவதாக டெல்லியில் என்ஐஏ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். சுமார் 50 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சந்தேக நபர்களின் வசிப்பிடங்களில் அந்தந்த மாநில போலீஸாருடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்று என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.