சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் 9,776 பட்டதாரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 14-வதுபட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக துணை வேந்தர் சோ.ஆறுமுகம் பங்கேற்று அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பிடித்த 485 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கி கவுரவித்தார். நேற்றைய விழாவில் 3,318 முதுகலை பட்டதாரிகள், 5,302 இளங்கலை பட்டதாரிகள், 24 முனைவர் பட்டதாரிகள், 8 எம்.பில். பட்டதாரிகள் உள்ளிட்ட 9,776 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் இந்திய தேசிய அறிவியல் அகாடெமி தலைவர் அசுத்தோஷ் சர்மா பேசியதாவது: நாம் தீர்க்கமான முடிவுகள் எடுப்பதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தரவுகளும், தகவல்களும் இப்போது கிடைக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் 97 ஜெட்டா பைட்டுக்கும் (ஒரு ஜெட்டா பைட் என்பது ஒரு ட்ரில்லியன் ஜிகா பைட்) அதிகமான தரவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளில் சேகரிக்கப்பட்டதை விட அதிகம். இந்த தரவுகள் ஒவ்வொரு ஆண்டும் 23 சதவீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இத்தரவுகளை சரியாக புரிந்து கொண்டு அறிவை பெருக்குவதே நம் முன் உள்ள உண்மையான சவாலாகும்.
பல்கலைக்கழக ஆசிரியர்கள், தொழிற்கல்வியை மட்டும் இளைஞர்களுக்கு போதிக்காமல் சமூக பன்முகத் தன்மை, இரக்க உணர்வு, தீர்வு தேடும் திறன் போன்றவற்றை மதிக்கும் கல்வியை போதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் சு.பாலசுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ரவி மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேநேரம் விழா அழைப்பிதழில் உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி, செயலாளர் அ.கார்த்திக் ஆகியோ ரின் பெயர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், இருவரும் விழாவில் நேற்று பங்கேற்கவில்லை.