Doctor Vikatan: ஆளிவிதை பல வகையான நோய்களைத் தடுக்கக்கூடியது என்கிறார்கள். எங்கள் வீட்டில் அனைவரும் தினமும் ஒரு டீஸ்பூன் அளவு ஆளிவிதை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். இது சரியானதா… தொடர்ந்து சாப்பிடுவதால் ஏதும் பக்கவிளைவுகள் ஏற்படுமா?
– நலன், காரைக்குடி
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது எல்லா உணவுகளுக்கும் பொருந்தும். ஆரோக்கியமானது என்பதற்காக அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதும் ஆபத்தானதுதான். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடியது, மூளையின் ஆரோக்கியத்துக்கு நல்லது, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக்கூடியது என ஆளிவிதைக்கு நிறைய நல்ல தன்மைகள் உண்டு என்றாலும் எந்த அளவு எடுத்துக்கொள்கிறோம் என்பது மிக முக்கியம்.
ஃபிளாக்ஸ் சீட்ஸ் எனப்படும் ஆளிவிதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமிருக்கிறது. சீட்ஸ் எனப்படும் எண்ணெய் வித்துகளை அளவோடுதான் சாப்பிட வேண்டும். அவை நம் உடலில் சூட்டை அதிகரிக்கக்கூடியவை. ஆளிவிதைகளை எலும்பு, மூட்டுகளில் வலி இருப்பவர்கள் சாப்பிடலாம். உடல் பலவீனமானவர்கள் சாப்பிடலாம்.

பீரியட்ஸின்போது ஏற்படும் உடல் அசதியைப் போக்க இதை எடுத்துக்கொள்ளலாம். ஆளிவிதைளை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்து வைத்துக்கொண்டு, நீங்கள் தினமும் சாப்பிடும் ஸ்மூத்தி, கஞ்சி போன்றவற்றில் சிறிது சேர்த்துச் சாப்பிடலாம். வறுத்த ஆளிவிதைகளை அப்படியே வெறுமனே கூட சாப்பிடலாம்
சாலட் போன்றவற்றில் தூவியும் சாப்பிடலாம். உடல் எடை மிகவும் குறைவாக உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இது உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதில் கவனம் இருக்கட்டும். சீட்ஸ் நல்லது என்பதால் சிலர், காலையில் கஞ்சியில், மதிய உணவில், இரவு உணவில் என எல்லா வேளைகளிலும் எடுத்துக்கொள்ளும் எல்லா உணவுகளிலும் சேர்த்துக்கொள்கிறார்கள். அது தவறானது.

உங்களுக்கு மிகவும் சூடான உடல்வாகு இருந்தாலோ, பீரியட்ஸின் போது ப்ளீடிங் அதிகமாக இருந்தாலோ, கருத்தரிக்கும் முயற்சியில் இருந்தாலோ, கண்களில் எரிச்சல் இருந்தாலோ, ஆளி விதைகளை மிகக் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே நீங்கள் தினமும் இதைச் சாப்பிடுவதற்கு பதில் வாரத்தில் மூன்று நாள்களுக்கு வேறு வேறு சீட்ஸை மாற்றி மாற்றிச் சாப்பிடலாம். ஒவ்வொன்றிலும் வேறு வேறு சத்துகள் இருக்கும் என்பதால் எல்லா சத்துகளும் உடலுக்குக் கிடைக்கும். ஆனால் எந்த விதையானாலும் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.