ஹமாஸை அழிக்கிறோம் என்ற பெயரில் பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில், 11,000-க்கும் மேற்பட்ட காஸாவாசிகள் உயிரிழந்திருக்கின்றனர். 36 நாள்களாக நடக்கும் இந்தப் போரில், காஸாவில் சிறுவர்கள் மட்டுமே 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.

இஸ்ரேலின் இத்தகைய தாக்குதலால், பொதுமக்களையும் தாண்டி காஸா மருத்துவமனையில் முறையான தண்ணீர், உணவு, மின்சாரம், மருந்து பற்றாக்குறை போன்றவற்றால் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வளவும் நிகழ்ந்தும், `காஸாவில் மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களுக்கு ஹாமாஸ்தான் காரணம், நாங்கள் அல்ல. பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காதவரை போர் நீண்டுகொண்டே போகும்’ என்று கூறிவருகிறது இஸ்ரேல்.
அதேமயம், காஸாவில் தினமும் நன்கு மணிநேரம் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்த நிலையில், காஸாவில் சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) வேதனை தெரிவித்திருக்கிறார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “காஸாவில் எங்கும் பாதுகாப்பு இல்லை. யாரும் பாதுகாப்பாக இல்லை. மருத்துவமனையின் தாழ்வாரங்கள் யாவும் காயமடைந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களால் நிரம்பி வழிகின்றன. பிணவறைகள் நிரம்பி வழிகின்றன. சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது. மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் மருத்துவமனைகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர்” என்று கூறி போர் நிறுத்தத்தை வலியுறுத்தினார்.