சி.சி.டி.வி கேமரா பார்வையில் ஷூட் செய்யப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் – எப்படிச் சாத்தியமானது?

விஷுவல் எஃபெக்ட்ஸ், ஒளிப்பதிவிற்கான புதுமையான கேமரா வகைகள் எனப் பெரும் வளர்ச்சியை சினிமா தொழில்நுட்பம் தற்போது எட்டியிருக்கிறது.

புதுமையான அனுபவத்திற்காகப் பல இயக்குநர்கள் தங்களின் திரைப்படங்களில் பல முன்னணி நுணுக்கங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கன்னடத்தில் ஒரு திரைப்படத்தை முழுக்க முழுக்க சி.சி.டி.வி கேமராவால் படம் பிடித்திருக்கின்றனர். அதுதான் கன்னட நடிகை பிரியங்கா உபேந்திராவின் நடிப்பில் உருவாகியிருக்கிற ‘கேப்சர்’ (Capture) திரைப்படம்.

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் உபேந்திராவின் மனைவி இவர். இவரை நடிகர் அஜித்தின் ‘ராஜா’, நடிகர் விக்ரமின் ‘காதல் சடுகுடு’ ஆகிய திரைப்படங்களில் நாயகியாகப் பார்த்திருப்போம். அதனைத் தொடர்ந்து தற்போது சில கன்னட மற்றும் பெங்காலி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்போது இவர் கன்னட இயக்குநர் எச்.லோகித்தின் இயக்கத்தில் ‘கேப்சர்’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கெனவே இயக்குநர் எச்.லோகித்துடன் பிரியங்கா உபேந்திரா நடித்திருந்த ‘மம்மி’, ‘தேவகி’ ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகியிருந்தன.

Capture Movie First Look

தற்போது இந்த வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாகப் புதுமையான முயற்சியுடன் களமிறங்கியுள்ளது. இத்திரைப்படம் முழுவதும் சி.சி.டிவி கேமராவின் பார்வையில் எடுக்கப்பட்டுள்ளது. ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் முழுக்க முழுக்க சி.சி.டி.வி புட்டேஜ்கள் வடிவில் காட்சிகள் நகர்த்தப்படுகிறதாம். அதற்காக இத்திரைப்படம் முழுவதும் ஒரே ஒரு லென்ஸைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

நடிகை பிரியங்கா உபேந்திராவின் பிறந்தநாளையொட்டி இத்திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றைப் படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் பிரியங்கா உபேந்திராவைப் பல சி.சி.டி.வி கேமராக்கள் சூழப்பட்டிருந்தன. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 30 நாள்கள் கோவாவில் நடைபெற்றிருக்கிறது. தற்போது இத்திரைப்படம் இறுதிக்கட்ட பணிகளை நெருங்கியுள்ளது.

சி.சி.டி.வி கேமராவின் பார்வையில் உருவாகும் முதல் இந்தியத் திரைப்படம் இதுதான். இது போன்று ஒளிப்பதிவாளர் இல்லாமல் பிறர் பார்வையில் உருவாகும் திரையாக்கத்தை ‘பவுண்ட் புட்டேஜ்’ (Found Footage) எனக் குறிப்பிடுவார்கள். அதாவது படத்தின் கதாபாத்திரங்களே கேமராவை நேரடியாகப் பார்த்துப் பேசுவது, அவர்களே செல்ஃபி வீடியோ எடுப்பது என்பதாக இந்த நுணுக்கம் அமைந்திருக்கும். இது போன்ற நுணுக்கங்கள் திரைப்படங்களில் துல்லியமாகத் தெரிய இதற்காகவே சில நிலையில்லாத ஷாட்களை எடுத்திருப்பார்கள்.

Priyanka Upendra

பெரும்பான்மையாக இந்த நுணுக்கத்தைப் பின்தொடரும் கதைக்களம் ஒரு குழு தொலைந்துவிட்டதாகவும் அவர்களைப் பின்தொடர்ந்து சிலர் செல்வதாகவும் அமைந்திருக்கும். தொலைந்து போனவர்களைக் கண்டுபிடிப்பதற்குச் செல்லும் போது கிடைக்கும் சில கேமரா புட்டேஜ்கள் மூலம் காட்சிகள் நகர்வதாக அமைந்திருக்கும். அந்த வரிசையில், ‘தி பிளேர் விட்ச் புராஜெக்ட்’ (A Blair Witch Project), ‘கேனிபல் ஹாலோகாஸ்ட்’ (Cannibal Holocaust), ‘பேரநார்மல் ஆக்டிவிட்டி’ (Paranormal Activity), ‘டைரி ஆஃப் தி டெட்’ (Diary of the Dead) போன்ற திரைப்படங்கள் அடங்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.