உத்தரப்பிரதேச மாநிலம், பிஜ்னோர் என்ற இடத்தில் வசிப்பவர் துக்காராம் பாண்டே. தொழிலதிபரான இவர், தன்னுடைய இரண்டு குழந்தைகள், தாயாரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார். அவர் மருத்துவமனைக்குச் சென்ற நேரத்தில், ஐந்து பேர்கொண்ட கும்பல் தொழிலதிபர் வீட்டுக்குள் நுழைந்து, அவரின் மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்தது. அதைத் தொடர்ந்து, வீட்டிலிருந்த ரூ.1.5 லட்சம் மதிப்பிலான பணம், தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது. தொழிலதிபர் மனைவிக்கு உடம்பில் சிகரெட்டால் காயத்தையும் ஏற்படுத்திவிட்டு, அந்தக் கும்பல் தப்பிச்சென்றது. மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த தொழிலதிபரிடம், நடந்த சம்பவம் குறித்து அவரின் மனைவி தெரிவித்தார்.

அதனடிப்படையில் இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்திவந்தனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண், மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து தொழிலதிபர் மனைவியிடம், போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தினர். இதில் தொழிலதிபர் மனைவிக்கு புஷ்பேந்திரா என்பவருடன் திருமணம் தாண்டிய உறவு இருந்தது தெரியவந்தது. புஷ்பேந்திராவுக்குப் பங்குச்சந்தையில் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் புஷ்பேந்திரா வெளியில் கடன் வாங்கியிருக்கிறார்.
அந்தக் கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல், தொழிலதிபரின் மனைவியிடம் கலந்தாலோசித்தார். இதில் இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை, கொள்ளை தொடர்பாக சதித்திட்டம் தீட்டியிருக்கின்றனர்.

தொழிலதிபர் வெளியில் சென்றிருந்தபோது புஷ்பேந்திரா அவரது வீட்டுக்கு வந்திருக்கிறார். அங்கு வீட்டிலிருந்த பணம், தங்க நகைகளை எடுத்துக்கொண்டு, கத்தியால் தொழிலதிபர் மனைவியின் கையை வெட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.
அவர் சென்ற பிறகு, தொழிலதிபரின் மனைவி சிகரெட்டால் தன்னுடைய கையில் சுட்டுக்கொண்டதும், விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நீரஜ் தெரிவித்தார். புஷ்பேந்திராவைக் கைதுசெய்து, அவர் எடுத்துச் சென்ற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.