கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று கோவையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பகிர்ந்த சில விஷயங்கள் இதோ!

பத்திரிகையாளர் சந்திப்பில் முதலில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “ ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தைப் பார்த்து விட்டு தலைவர் ரஜினிகாந்த் ‘குறிஞ்சி மலர்’ என்று பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஜிகர்தண்டா முதல் பாகம் ரிலீஸிற்கு பின் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்குப் பிறகு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ரிலீஸ் ஆகி குறிஞ்சி மலர் என்ற பெயரை வாங்கி இருக்கிறது. பொதுவாக டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இவ்வாறு கூறுவது உண்டு. ‘நாம நம்ம படத்தை பத்தி பேசக்கூடாது. நம்ப படம் தான் பேசணும்’.
ஆனால் இம்முறை பட ரிலீஸிற்கு முன்னரே கார்த்திக் சுப்பாராஜ் சொல்லிவிட்டார் இந்த படம் அவருடைய கரியரின் மிக நல்ல படங்களுள் ஒன்று என்று. என்னுடைய நடிப்புத்துறையில் ஒரு பிரேக் பாயிண்ட் ஆக இருந்தது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடித்த ‘இறைவி’ படம்தான். அதுபோல தான் இந்த படத்திலும் என்னை ஒரு ஹீரோவாக அங்கீகரித்திருக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் என்னுடைய நண்பர் மட்டும் அல்ல. திரையைத் தாண்டி நிஜ வாழ்விலும் அவர் ஒரு ஹீரோ” என்றார்.
அதன் பிறகு மக்களின் ரெஸ்பான்ஸ் குறித்து பேசிய அவர், “ மக்களுடைய கலை தரம் உயர்திருக்கிறது. வார நாட்களில் ஒரு படம் ஐம்பது சதவீதம் ஓடினாலே அது வெற்றி படம்தான். ஆனால் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இங்கே கோயம்புத்தூரில் ஹவுஸ் பில் ஆக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார். திரைத்துறையில் தனக்கு கிடைத்த பாராட்டுகள் குறித்து பேசுகையில், “ திரைத்துறையில் தனக்கு கிடைத்த பாராட்டுகளைப் பற்றி பேசுகையில் அவர் கூறியதாவது, “எம்.ஜி.ஆர் சிவாஜி போன்றவர்களுக்கு போட்டியாக நடித்தவர் எம். ஆர். ராதா அவருடன் என்னை இணைத்து என்னை அடுத்த எம். ஆர். ராதா என்று அழைத்தது அடுத்தடுத்தப் படங்களில் நான் நடிப்பதற்கு ஊக்கபடுத்தி இருக்கிறது. என்னுடைய படங்கள் வெற்றியடைவதற்கு முழுக்காரணம் அந்த படத்தின் நல்ல கதைதான். ‘நாம் கலையை தேர்ந்தெடுப்பது இல்லை கலைதான் நம்மை தேர்ந்தெடுகிறது என்று சொல்வார்கள்’ அதுப்போல தான் நல்ல கதைகள் அமைவது ஒரு ஆசீர்வாதம்” என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் , “ ‘பேட்ட’ படத்திற்கு பிறகு ரொம்ப நாள் கழித்து தியேட்டரில் ரிலீஸாகும் எனது படம் இது. பலர் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ஜிகர்தண்டாவை முதல் பாகத்தைவிட நன்றாக இருக்கிறது என்று கூறும்போது ஒட்டுமொத்த டீமும் மிக மகிழ்ச்சியாக இருக்கின்றோம். ‘ஜிகர்தண்டா’ படத்தை இயக்கும்போது ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’-ஐ இயக்கும் ஐடியா இருந்ததில்லை. ஆனால் இப்போது ஜிகர்தண்டா- 3 எடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதை உடனே பண்ணாமல், சில ஆண்டுகள் கழித்து பண்ண நினைக்கிறேன்” என்றார்.
திரையுலகில் லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குநர்கள் எல். சி. யு போல புது கான்செப்டை பிரபலப்படுத்தும் போது சத்தமே இல்லாமல் நீங்கள் கே.சி.யு. போல சம்பவம் செய்துவிட்டீர்கள். இதை பற்றி தங்களுடைய கருத்தென்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த கார்த்திக் சுப்புராஜ் , “ எல்.சி.யு என்பது எனக்கு பிடித்த விஷயம். அது செம ஐடியா என லோகேஷ் கனகராஜிடம் கூறினேன். நான் ஒரே மாதிரி படங்கள் அடுத்தடுத்து பண்ணமாட்டேன். வேறு வேறு களங்களில் படம் பண்ண நினைப்பேன். அதனால் கே.சி.யு என்பது இல்லை.

இதனைத்தொடர்ந்து பேசிய ராகவா லாரன்ஸ், “ திருச்சி, மதுரை போல கோவையிலும் படம் ஹவுஸ் புல்லாக செல்லக் காரணமான மக்களுக்கு நன்றி. குறிஞ்சி மலர் என படத்தை பாரட்டிய சூப்பர் ஸ்டாருக்கு நன்றி. அவர் சூட்டிங் போகும் நேரத்தை தள்ளி வைத்து எங்களிடம் படம் குறித்து பேசினார். நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா உடன் நடித்து பெயர் வாங்குவது கஷ்டம். தற்போது இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வருகிறது. மக்களுக்கு எது பிடிக்கிறதோ, அதை பண்ண வேண்டும். வெளி இயக்குநர்களுக்கு படம் பண்ண வேண்டும் என முடிவு செய்துள்ளேன். இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்த போதே, இது என் லைஃப் டைம் படம் என்பது தெரிந்தது. இது சரியாக வருமா என இருந்த சந்தேகங்கள் கார்த்திக் சுப்புராஜின் நம்பிக்கையால் சிறப்பாக வந்தது” எனத் தெரிவித்தார்.