ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு 10 கிராம் தங்கம், ரூ.1 லட்சம் நிதியுதவி: தெலங்கானா தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் உறுதி

ஹைதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சிசார்பில் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

ஹைதராபாத்தில் உள்ள காந்தி பவனில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதனை வெளியிட்டார். இதில் காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள் வருமாறு:

மகாலட்சுமி எனும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை, ரூ.500-க்கு சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படும். அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.

விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி, விவசாய கூலிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் நிதியுதவி, நெல்லுக்கு குவிண்டாலுக்கு கூடுதலாக ரூ.500 வழங்கப்படும்.

கிருஹ ஜோதி திட்டத்தின் கீழ், 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். இந்திரம்மா வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு இல்லாத குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவுடன் வீடு கட்ட ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

தெலங்கானா போராட்ட தியாகிகளுக்கு 250 கஜத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்.

இளைஞர்களுக்காக சர்வதேச அரசுப் பள்ளிகள் அமைக்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ வசதி அளிக்கப்படும். இவ்வாறு காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

24 மணி நேர இலவச மின்சாரம்: பின்னர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் வேலையில்லா திண்டாட்டம் முற்றிலுமாக ஒழிக்கப்படும். முதல் ஆண்டிலேயே 2 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். 18 வயது நிரம்பிய மாணவிகளுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும். தெலங்கானாவுக்காக போராடி உயிர்நீத்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 250 கஜத்தில் வீட்டுமனைப் பட்டாவும், மாநிலம் முழுவதும் விவசாயத்திற்கு 24 மணி நேர இலவசமின்சாரமும் வழங்கிடுவோம்.

கல்யாண மஸ்து திட்டத்தின் கீழ் ஏழை பெண்கள் திருமணத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி,10 கிராம் தங்கம் வழங்கப்படும். மகளிர் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்கப்படும்.

பத்திரிகை துறையில் பணியாற்றும்நிருபர்கள், புகைப்பட கலைஞர்களின்நலனுக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு மல்லிகார்ஜுனகார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று ஹைதராபாத்தில் திறந்த வேனில் சென்றபடி வாக்கு சேகரித்தார். அப்போதுஅவர் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.