நாட்டின் ஊழல்களைத் தடுப்பதற்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிரதான நிறுவனத்தின் பதவி தனித்துவமானது என்பதால் அதன் கௌரவம் மற்றும் பெறுமதிக்குப் பொருத்தமான வகையில் உரிய சம்பளம் அளவு மிகவும் வலுவானதாக இருக்க வேண்டும் – மீண்டும் கருத்தில் கொண்டு அமைச்சரவை அனுமதியை மீண்டும் பெறுமாறு அரசாங்க நிதி பற்றிய குழு பரிந்துரை
பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைவரின் சம்பள அளவு மிகவும் வலுவானதாக இருக்கவேண்டும் என்பதால் தற்பொழுது முன்மொழியப்பட்டுள்ள சம்பள அளவை மீண்டும் கருத்திற் கொண்டு மீண்டும் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவினால் (16) பரிந்துரை வழங்கப்பட்டது.
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான முன்மொழிவு அனுமதிக்காக கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு (16) முன்வைக்கப்பட்ட போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
நாட்டில் ஊழலைத் தடுப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள பிரதான நிறுவனத்தின் தலைமைப் பதவி தனித்துவமானது எனவும், அதன் கௌரவம் மற்றும் பெறுமதிக்குப் பொருத்தமான வகையில் உரிய சம்பளம் அளவு மிகவும் வலுவானதாக இருக்க வேண்டும் எனவும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
இதன்போது முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிடுகையில், நீதிச் சேவையில் காணப்படும் சம்பளத்தைக் கருத்திற்கொண்டு மேன்முறையீட்டு நீதிபதிகளின் சம்பள அளவுக்கு சமனான வகையில் இந்த சம்பள அளவு முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
ஏனைய ஆணைக்குழுக்களின் தலைவர்களுக்கு மேலதிக வருமான மார்க்கங்களில் தொடர்புபடுவதற்கு சந்தர்ப்பம் காணப்பட்டாலும், இந்த ஆணைக்குழுவின் தலைவருக்கு அவ்வாறான அனுமதியில்லை என்பது புலப்பட்டது. அதனால் பதவியின் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் இந்த சம்பள அளவு உயர்வான நிலைக்கு கொண்டுவரப்படுவதன் அவசியத்தை குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
இந்தக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஷெஹான் சேமசிங்க, கௌரவ (வைத்தியகலாநிதி) சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ (கலாநிதி) நாளக கொடஹேவா, கௌரவ எம்.ஏ. சுமந்திரன், கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ நிமல் லன்சா, கௌரவ காவிந்த ஜயவர்தன, கௌரவ மயந்த திசாநாயக்க, கௌரவ ஹர்ஷண ராஜகருணா, கௌரவ மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ சஹன் பிரதீப் விதான மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
பதவி தனித்துவமானது என்பதால் அதன் – மீண்டும் கருத்தில் கொண்டு அமைச்சரவை அனுமதியை மீண்டும் பெறுமாறு அரசாங்க நிதி பற்றிய குழு பரிந்துரை