“இரண்டை மூன்றாக்குங்கள்” – 3-வது முறையாக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இந்திய கிரிக்கெட் அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்ல, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது எக்ஸ் தளத்தில், “உலகக் கோப்பையை வென்று இரண்டை மூன்றாக்க வேண்டும்” என வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி 1983 மற்றும் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பைகளை வென்றுள்ளது.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி லீக் சுற்றில் வீழ்த்த முடியாத அணியாக அசுர பலத்துடன் திகழ்ந்தது. எதிர்த்து விளையாடிய 9 அணிகளுக்கு எதிராகவும் வெற்றிகளை குவித்து லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்திருந்தது. தொடர்ந்து அரை இறுதி சுற்றில் நியூஸிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது லீக் சுற்றில் அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்து நெருக்கடியை சந்தித்தது. 5 முறை சாம்பியனான அந்த அணி ஒரு கட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 10-வது இடத்தில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் விவேகமெடுத்த அந்த அணி தொடர்ச்சியாக 7 வெற்றிகளை குவித்து அரை இறுதிக்கு முன்னேறியது. அரை இறுதி சுற்றில் தென் ஆப்பிரிக்காவை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 8-வது முறையாக இறுதி சுற்றில் கால்பதித்தது ஆஸ்திரேலிய அணி.

சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை மிகப்பெரிய எல்இடி திரையின் மூலம் ஒளிபரப்ப தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.