ஆமதாபாத்: உலக கோப்பை தொடரின் பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்ற பிரதமர் மோடி, கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் உள்பட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் இன்று மாதியம் நடக்கும் பைனலில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் மைதானத்திற்கு வந்துள்ளனர். ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்த போட்டியை காண பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் நேரில் வருகின்றனர்.
பைனலில் இந்தியா வெற்றி பெற நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பூஜைகள், யாகங்கள் நடக்கின்றன. பல சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள், ஆமதாபாத் நகருக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
பிரதமர் மோடி வாழ்த்து
இந்திய அணி வெற்றி பெற 140 கோடி இந்தியர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சச்சின் வாழ்த்து
பைனலை பார்க்க ஆமதாபாத் வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:
எனது வாழ்த்தை சொல்லவே இங்கு வந்துள்ளேன். ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்திய அணி உலக கோப்பையை 3வது முறையாக கைப்பற்றும் என நம்புகிறேன். கோடிக்கணக்கான மக்களின் வேண்டுதலுக்கு இன்று விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா
உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். உலக சாம்பியன் ஆவதற்கு என்ன தேவையோ அது உங்களிடம் உள்ளது. நாட்டிற்கு நீங்கள் தொடர்ந்து பெருமை சேர்க்கிறீர்கள். இறுதிப்போட்டிக்கான உங்கள் பயணம் மிகவும் உத்வேகம் அளிக்கிறது. ஒற்றுமை, கடின உழைப்பு, உங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை என மதிப்பு மிக்க பல பாடங்களை கொண்டு உள்ளது.
மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான்
இந்தியா வெற்றி பெற வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். ஆஸ்திரேலியாவும் நல்ல அணி தான். நமது வீரர்கள் சிறப்பாக விளையாடுவதால், நிச்சயம் கோப்பையை கைப்பற்றுவார்கள்.
ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு:
“பாரத அணிக்கு என்ன ஒரு அற்புதமான விளையாட்டு தொடராக இது இருந்துள்ளது. நம் கிரிக்கெட் அணி விளையாட்டை முற்றிலும் புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது, விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று 10/10 என்பது யாரும் கேள்விப்படாதது! முன்மாதிரியான கேப்டன்ஷிப் மற்றும் தனிப்பட்ட வீரர்களின் அற்புதமான செயல்பாடுகள், சாதனைகள் ஏராளமாக இருப்பதால், இந்த வலிமையான அணி இறுதிப் போட்டியைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
பா.ஜ., தேசிய இளைஞர் அணி செயலாளர் தேஜஸ்வி சூர்யா
உலக கோப்பை பைனல் இன்று நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா கோப்பையை கைப்பற்றும் என ஒட்டு மொத்த உலகமும் எதிர்பார்க்கிறது. மிகச்சிறப்பான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
முதல்வர் ஸ்டாலின்
Come on #INDIA! Make it three.#WorldCupFinal2023 #INDvAUS
— M.K.Stalin (@mkstalin) November 19, 2023
காங்., தலைவர் கார்கே
இந்தியா உலகக் கோப்பை பைனலில் இந்தியா வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்களுக்கு ஆதரவாக முழு நாடும் உள்ளது.
ராகுல் வாழ்த்து
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை வீட்டிற்கு கொண்டு வருவோம். அச்சமின்றி விளையாடுங்கள். ஒரு பில்லியனுக்கும் அதிகமான இதயங்கள் உங்களுக்காக துடிக்கின்றன.
காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா
இன்று உலக கோப்பை பைனல் நடக்கிறது. பவுலிங் மற்றும் பேட்டிங்கில் நமது அணி சாதனை படைத்து வருகிறது. இது நமது ஒற்றுமையை காட்டுகிறது. இந்திய அணிக்கு வாழ்த்துகள்.
மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். வெற்றிக்காக ஒட்டுமொத்த தேசமும் காத்திருக்கிறது. எங்களை பெருமைப்படுத்துங்கள் வீரர்களே.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்