பாகல்கோட் : கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி, அசோக்கிற்கு கொடுக்கப்பட்டு இருப்பதால், பஞ்சமசாலி மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்சய சுவாமிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, லிங்காயத்தின் பஞ்சமசாலி சமூகத்தைச் சேர்ந்த, மூத்த எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் எதிர்பார்த்தார்.
தனக்கு கிடைக்காவிட்டாலும், வடமாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவருக்கு, அந்த பதவி கிடைக்க வேண்டுமென, மேலிட பொறுப்பாளர்களிடம் கோரிக்கையும் வைத்தார்.
ஆனால் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக அசோக்கை, கட்சி மேலிடம் நியமித்து உள்ளது. இதற்கு பஞ்சமசாலி மடத்தின் மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்சய சுவாமிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
பாகல்கோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பஞ்சமசாலி சமூக தலைவர்களை, அரசியல்ரீதியாக ஒடுக்க முயற்சி நடக்கிறது. எங்கள் சமூகத்திற்கு ‘2ஏ’ இடஒதுக்கீடு கேட்டு போராடிய, தலைவர்களுக்கு எதிராக சதி நடக்கிறது.
பசனகவுடா பாட்டீல் எத்னால், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தகுதியானவர். அவரைத்தான் தேர்வு செய்வர் என்று நினைத்தோம். ஆனால் அவரை கைவிட்டது சந்தேகமாக உள்ளது.
காங்கிரஸ், பா.ஜ., கட்சிகள் எங்கள் சமூகத்திற்கு அநீதி இழைக்கின்றன. இடஒதுக்கீடு வழங்குவதில் தாமதம், எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காததால், சமூக மக்கள் கோபத்தில் உள்ளனர்.
இந்த கோபம் எப்போது வெடிக்கும் என்று தெரியவில்லை. இடஒதுக்கீடு கேட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த பா.ஜ., ஆட்சியில் ‘2ஏ’ இடஒதுக்கீடு கேட்டு, பஞ்சமசாலி சமூகத்தினர் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். தேர்தலுக்கு முன்பு ‘2டி’ இடஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் அதை ஏற்கவில்லை. இதனால் பஞ்சமசாலி சமூகம், காங்கிரசை ஆதரித்தது.
விஜயேந்திராவுக்கு மாநில தலைவர் பதவி கிடைத்திருப்பதன் மூலம், பஞ்சமசாலி சமூக ஓட்டுகளை பிடிக்கலாம் என்று, பா.ஜ., மேலிடம் கணக்கு போட்டு இருந்தது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காதால், மடாதிபதி அதிருப்தியில் இருப்பது, பா.ஜ.,வை சற்று கலக்கம் அடைய செய்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்