இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு மத்தியில் நடந்து வரும் போர் 45 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், இன்னும் போர் ஓய்ந்தபாடில்லை. 4,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட ஏறத்தாழ 12 ஆயிரம் மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப்போரைப் பாலஸ்தீன அரசு “இஸ்ரேலின் இன அழிப்பு நடவடிக்கை” என வரையறுத்திருந்தது. உலக நாடுகளின் வலியுறுத்தலை மீறியும் இன்னும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் மனநிலையில் இஸ்ரேல் இல்லை. இதற்கிடையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரானின் ஹிஸ்புல்லா குழுவும், ஏமனின் ஹவுதி குழுவும் ஹமாஸ் போராளிக்குழுவுடன் இணைந்திருக்கின்றன.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஈரான் அரசு பல்வேறு நாடுகளிடம் கோரிக்கை வைத்து, பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கு மத்தியில், ஏமன் – ஈரானுடன் இணைந்ததற்குப் பின்பான போராளிகளின் செய்தித் தொடர்பாளர், “இஸ்ரேலிய நிறுவனங்களுக்குச் சொந்தமான, தொடர்புடைய அல்லது இஸ்ரேலின் கொடி பறக்கும்அனைத்து கப்பல்களையும் குறிவைக்கத் திட்டமிட்டிருக்கிறோம். எனவே, அத்தகைய கப்பல்களில் பணிபுரியும் ஒவ்வொரு நாட்டின் குடிமக்களையும் அந்தந்த நாடுகள் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில்தான், இந்தியாவுக்குச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த Galaxy Ladder எனும் சரக்கு கப்பலை, தெற்கு செங்கடலில், ஹெலிகாப்டரிலிருந்து கப்பலில் இறங்கி ஹவுதி குழு கடத்தியிருக்கிறது. இந்த கடத்தல் குறித்துப் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “அந்த சரக்கு கப்பல் இஸ்ரேலுக்குச் சொந்தமானதல்ல. பிரிட்டிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமானது. ஜப்பானிய நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. கப்பலில் உக்ரைன், பல்கேரியன், பிலிப்பைன்ஸ் மற்றும் மெக்சிகன் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 பணியாளர்கள் இருந்தனர்.

அந்தக் கப்பலில் இஸ்ரேலியர்கள் யாரும் இல்லை. கப்பல் கடத்தப்பட்டது என்பது ஈரானின் பயங்கரவாதச் செயலாகும், இது சுதந்திர உலகின் குடிமக்களுக்கு எதிரான, உலகளாவிய கப்பல் பாதைகளின் பாதுகாப்பிற்கு எதிரான சர்வதேச குற்றமாகும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், ஹவுதி குழு செய்தித்தொடர்பாளர்,” நாங்கள் கடத்தியது இஸ்ரேலிய கப்பல்தான். தெற்கு செங்கடலிலிருந்து ஏமன் துறைமுகத்திற்குக் கப்பலைக் கொண்டு வந்திருக்கிறோம். மிக மரியாதையாகவே கப்பல் பணியாளர்களை நடத்துகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.