90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான `தூம்’, `தூம் 2′ படங்களின் இயக்குநர் சஞ்சய் காத்வியின் மறைவிற்கு நடிகர் அபிஷேக் பச்சன் இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
‘தேரே லியே’ எனும் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் சஞ்சய் காத்வி. 2004-ம் ஆண்டு ‘தூம்’ என்ற ஆக்ஷன் திரில்லர் படத்தை இயக்கியவர், அதன் மூலமாக பாலிவுட்டின் டிரெண்டையே மாற்றினார். 2006-ம் ஆண்டு ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் ‘தூம் 2’வையும் இயக்கிப் பெரும் வெற்றிப் படைப்பாக அதை மாற்றியிருந்தார். இந்த இரண்டு படங்களுமே 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டாக மாறிப்போயின. குறிப்பாக இந்தப் படவரிசை அபிஷேக் பச்சனுக்குப் பெரும் பிரேக்காக அமைந்தது. அதன் பிறகு சஞ்சய், ‘கிட்நாப்’, ‘ஆபரேஷன் பரிந்தே’ போன்ற சில படங்களை இயக்கினார்.

இந்நிலையில், 56 வயதாகும் சஞ்சய் காத்வி நேற்று காலை 9.30 மணியளவில் மும்பையில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார். பாலிவுட் திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் நடிகர் அபிஷேக் பச்சனும் சஞ்சய் காத்விக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
சஞ்சய் காத்வியுடன் எடுத்த புகைப்படத்துடன் அவர் வெளியிட்டிருந்த பதிவில், “‘தூம் 2’ படத்தின் க்ளைமாக்ஸைத் தென்னாப்பிரிக்காவில் படமாக்கிக்கொண்டிருக்கும் போது நான் சஞ்சய்யின் இந்தப் புகைப்படத்தை எடுத்தேன்.
நாங்கள் இருவரும் சேர்ந்து இரண்டு படங்களில் பணிபுரிந்திருக்கிறோம். கடந்த வாரம் நான் உங்களிடம் படப்பிடிப்புகள் மற்றும் நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்டிருந்தபோது, இப்படி ஓர் இரங்கல் பதிவை எழுதுவேன் என்று நான் என் கனவில் கூட நினைத்துப்பார்க்கவில்லை. இந்தச் செய்தியைக் கேட்டதும் நம்ப முடியாத அளவிற்கு அதிர்ச்சி அடைந்தேன்.
I took this photo of Sanjay whilst we were filming the climax of Dhoom 2 in South Africa. We made 2 films together – Dhoom and Dhoom 2. Sanju, when I spoke to you last week and we were reminiscing about our shoots and memories I would never have imagined even in my craziest… pic.twitter.com/zHvoy3FVVl
— Abhishek (@juniorbachchan) November 19, 2023
என்னை நான் நம்பாதபோதும், என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புகள் வழங்கி எனக்கு வெற்றியைக் கொடுத்தீர்கள். இதனை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. உங்கள் நட்பை நான் என்றென்றும் போற்றுவேன். Rest in peace my brother!“ என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.