காசாவில் கொடூரம்; ஐ.நா.வின் பள்ளியில் நடந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட பலர் பலி

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இதுதவிர, இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்கும் தீவிர பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. இதற்காக, தரைவழி தாக்குதலையும் முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், வடக்கு காசா பகுதியில் ஜபல்யா என்ற இடத்தில் ஐ.நா.வுக்கான பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அல்-பகாவுரா என்ற அந்த பள்ளியில் புலம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் என பலரும் உள்ளனர்.

2 அடுக்குமாடிகளை கொண்ட அந்த பள்ளியின் பல்வேறு அறைகளிலும் மக்கள் தங்கியிருந்த நிலையில், திடீரென தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அதிர்ச்சி தரும் வீடியோ ஒன்று வெளியானது.

அதில் அறை ஒன்றில், தரையில் 20-க்கும் மேற்பட்ட உடல்கள் கிடக்கின்றன. ரத்தம் தோய்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்கள் காணப்படுகின்றன. மேஜைகள் பரவலாக சிதறி கிடக்கின்றன. அறைகளின் சுவரொன்றில் ஒரு பெரிய ஓட்டை காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரை பகுதியொன்று பெயர்த்து எறியப்பட்டு உள்ளது. கட்டிட இடிபாடுகள் தரையில் பரவி கிடக்கின்றன.

இதனை ஐ.நா.வுக்கான நிவாரண மற்றும் பணிகள் கழகத்தின் செய்தி தொடர்பாளரான ஜூலியட் தவுமா உறுதிப்படுத்தி உள்ளார். எனினும், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை பற்றிய விவரங்கள் தெரியவரவில்லை என அவர் கூறியுள்ளார்.

காசாவில் ஐ.நா.வின் முக்கிய நிவாரண அமைப்புகளில் ஒன்றாக இந்த பள்ளிகள் செயல்பட்டு வருவதுடன், பாலஸ்தீனிய அகதிகளின் முகாம்களில் இந்த பள்ளிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், இந்த சம்பவத்திற்கான காரணம் மற்றும் இதற்கு யார் பொறுப்பு என்ற விவரங்களை உறுதிப்படுத்த முடியவில்லை என்று ஜூலியட் கூறியுள்ளார்.

ஐ.நா.வுக்கான நிவாரண மற்றும் பணிகள் கழகத்தின் தலைவர் பிலிப் லஜ்ஜாரினியும் இதனை உறுதிப்படுத்தி உள்ளதுடன், சம்பவம் நடந்தபோது, ஆயிரக்கணக்கான புலம்பெயர் மக்கள் அதில் தஞ்சம் புகுந்திருந்தனர். இந்த புகைப்படங்கள் கொடூரம் வாய்ந்தவை என அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் தெரிவித்து உள்ளார்.

4 ஆயிரம் பேர் அடைக்கலம் புகுந்த ஜைதவுன் பகுதியில் அமைந்த மற்றொரு பள்ளியில் பலமுறை தாக்குதல் நடந்த 24 மணிநேரத்தில் மற்றொரு பள்ளியில் தாக்குதல் நடந்துள்ளது என ஜூலியட் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.