ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. அரசையும், திமுக-வின் திராவிட மாடலையும் கடுமையாக சாடி வருகிறார், ஆளுநர். மேலும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 22-க்கும் மேற்பட்ட மசோதாக்களையும் நிலுவையில் வைத்திருக்கிறார். இதற்கிடையில் கடந்த 13-ம் தேதி நிலுவையில் உள்ள 10 மசோதாக்களை அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதையடுத்து 18-ம் தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி சம்மந்தப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கே அனுப்பி வைத்திருக்கிறது, தமிழக அரசு.

முதல்வர் ஸ்டாலின்
அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்து ஆற்றிய உரையில், “இந்தச் சட்டமன்றப் பேரவையில் நாம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தார் ஆளுநர். “I withhold assent” அதாவது, தான் அனுமதியை நிறுத்திவைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, நாம் இங்கு நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவுகளை கடந்த 13.11.2023 அன்று திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றார். ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சட்டமுன்வடிவுகளை நாம் இங்கே மீண்டும் நிறைவேற்றி, அவரது ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்க இருக்கிறோம். அதற்காகத்தான் இன்றைக்கு இந்தச் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
மக்களாட்சித் தத்துவத்தின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மைமிக்க ஓர் அரசால், மாநில நலன் கருதி சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநரின் கடமை. அவருக்கு அதில் சட்டரீதியாக அல்லது நிர்வாக ரீதியாக ஏதேனும் தெளிவுரை தேவைப்பட்டால், அதனை அவர் அரசிடம் கோரலாம். அதனை அரசு வழங்க வேண்டும். அந்த வகையில் இதற்கு முந்தைய சில நிகழ்வுகளில் அவர் எழுப்பிய சில வினாக்களுக்கு முறையாக எழுத்து மூலமாகவும், சம்மந்தப்பட்ட அரசு செயலர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் நேரிலும் விளக்கம் அளித்துள்ளனர்.

எந்த ஒரு நிகழ்விலும் அவர் கோரிய விளக்கங்கள் அவருக்கு வழங்கப்படாமல் இருந்ததில்லை. இந்தச் சூழ்நிலையில் அவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில், சட்டமன்றப் பேரவையினால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சில சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி வழங்காமல் திருப்பி அனுப்பி வைத்திருப்பது என்பது தமிழ்நாட்டு மக்களையும், இந்தச் சட்டமன்றத்தையும் ஆளுநர் அவமதிக்கின்றார் என்றுதான் பொருளாகும். 10 சட்ட முன்வடிவுகள் உள்ளிட்ட 12 சட்ட முன்வடிவுகள் மற்றும் வேறு சில கோப்புகளுக்கும் இவர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்டவிரோதம் ஆகும். ஜனநாயக விரோதம் ஆகும். மக்கள் விரோதம் ஆகும். மனச்சாட்சி விரோதம் ஆகும். அனைத்திற்கும் மேலாக இந்த சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானதாகும்” என கொதித்தார். பிறகு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை மறு ஆய்வு செய்வதற்காக முதல்வர் தனித் தீர்மானம் கொண்டுவந்துள்ளார். ஆளுநர் தரப்பில் நிறுத்திவைப்பு என்று கூறப்பட்டுள்ளது. நிறுத்திவைப்பு என்று கூறுவதால், அது தொடர்ந்து ஆய்வில் இருப்பதாகத்தான் பொருள். அது ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை” என்றார். அதற்கு பதிலளித்த சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, “எதிர்க்கட்சித் தலைவர் கூறுவதுபோல நிலுவையில் இருப்பதாக அர்த்தம் அல்ல. அவை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆளுநர் நிறுத்திவைப்பு என்று கூறியிருப்பதால், அது அவர் ஆய்வில் இருப்பதாகவும், சட்டமசோதாக்களை நிறைவேற்றி அனுப்பி வைத்தாலும், ஆளுநர் ஒப்புதல் வழங்க கட்டுப்பட்டவர் அல்லர் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அதையே எதிர்க்கட்சித் தலைவரும் கூறுகிறார். அது தவறான கருத்து” என்றார்.

அவை முன்னவர் துரைமுருகன், “நிறுத்திவைக்கப்பட்டது என்றால் அது உயிரோடு இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். ஆனால், ஆளுநர் அப்படிக் கூறவில்லை. அவர் ஏற்கெனவே மசோதாவுக்கு காலதாமதம் ஆகிறது என்றால், அதை நிராகரித்துவிட்டேன் என்றுதான் அர்த்தம் எனக் கூறியுள்ளார். எனவே, அது செத்துப் போய்விட்டது” என்றார்.
“குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ சட்ட மசோதாக்களை நிராகரிப்பதாகக் கூறுவதில்லை. நிறுத்திவைப்பு என்றுதான் கூறுகின்றனர். நிறுத்திவைப்பு என்று கூறினால், நிராகரிப்பு என்றுதான் பொருள். அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு விலக்கு மசோதா அனுப்பப்பட்டபோது, குடியரசுத் தலைவர் நிறுத்திவைப்பு என்று பதில் அளித்தார். ஆனால், நீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் நிறுத்திவைப்பு என்றாலே, குடியரசுத் தலைவர் அதை நிராகரித்து உள்ளார் என்றுதான் பொருள் என்று கூறினார். எனவே, மசோதாவை ஆளுநர் நிறுத்திவைக்கிறேன் என்று கூறினால், அது நிராகரிக்கிறேன் என்றுதான் பொருள்” என்றார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
இதேபோல் பேரவைத் தலைவர், “நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் நிறுத்திவைத்தபோது, அப்போது அமைச்சர் சி.வி.சண்முகம் என்ன காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டது என்று கூறியிருந்தால், பேரவையில் அந்த மசோதாவை மறுஆய்வு செய்து நிறைவேற்றியிருப்போம் என்று கூறினார். அப்போது, முதல்வராக இருந்தவரும் சட்டத்தை மறுஆய்வு செய்வதற்கு பேரவைக்கு உரிமைக்கு உள்ளது என்று கூறியுள்ளார்” என்றார். எனவே மசோதாக்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறதா?, நிராகரிக்கப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் கேட்டோம்.

அதற்கு பதிலளித்த அவர், ” ‘மசோதாவை ஆளுநர் நிறுத்திவைக்கிறேன் என்று கூறினால், அது நிராகரிக்கிறேன் என்றுதான் பொருள்’ என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் விசாரித்ததும் எதற்காக ஆளுநர் திருப்பி அனுப்புகிறார். அங்கு சென்று withhold செய்திருக்கிறேன் என்று கூற வேண்டியது தானே?.எதற்காக தமிழக அரசிடம் தெரிவிக்கிறார்?. இன்று 10 மசோதாக்கள் மீது எப்போது முடிவு எடுக்கப்போகிறீர்கள் என்றும் நீந்திமன்றம் கேட்டிருக்கிறது. கோர்ட்டுக்கு ஒரு விஷயம் சென்றவுடன் நீங்கள் இதை செய்கிறீர்கள் என்றால் குற்றஉணர்வுடன் இருக்கிறீர்கள் என்று தானே அர்த்தம். இதனால் தான் அதிமுக அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு ஒப்புதலும் அளித்திருக்கிறார்.
நிராகரிப்பதற்கான அதிகாரம் அவருக்கு இல்லை. மக்களாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஏற்றும் ஒரு சட்டத்தை முதல்முறை அவரை திருப்பி அனுப்பினால் கூட இரண்டாவது முறை withhold செய்வதற்கான வாய்ப்பு கிடையாது. withhold-யை நிராகரிப்பு என்று சொல்வது தவறான கருத்து. அவரால் ஒப்புதல்(Assent) கொடுக்க, அரசுக்கு திருப்பி அனுப்ப, ஜனாதிபதிக்கு அனுப்புதல் ஆகியவற்றை மட்டுமே செய்ய முடியும். இந்த மூன்று அதிகாரம் மட்டுமே இருக்கிறது. withhold செய்வதற்கு நீங்கள் யார்?. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எதற்காக இருக்கிறார்கள்?. சட்டத்தினால் ஏற்படக்கூடிய நன்மை, தீமைகளை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும். அவருடைய அதிகாரத்தை பறிக்கும் மசோதாவை நிறுத்திவைத்திருக்கிறார் என்றால் கூட பிற மசோதாக்களை எதற்காக நிறுத்தி வைக்க வேண்டும்?.

அப்போது உங்களுடைய அதிகாரம் பறிக்கப்படுவதுதான் பிரச்னையா?. withhold செய்வதற்கு சரியான காரணத்தை சொல்ல வேண்டும். அப்போது அதை சரி செய்து அரசு மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கும். withhold என்று கூறி ஆண்டுக்கணக்கில் வைத்திருக்க முடியாது. நிராகரிப்பதற்கு அங்கு வேலையில்லை. எனவே நிறுத்திவைத்தாலும், நிராகரித்தாலும் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.