A request to avoid incivility in metro trains | மெட்ரோ ரயிலில் அநாகரிகம்; தவிர்க்கும்படி வேண்டுகோள்

புதுடில்லி : ”டில்லி மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஆட்சேபனைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை பயணியர் தவிர்க்க வேண்டும். இது போன்ற செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என, டில்லி மெட்ரோ ரயில் கழக தலைவர் விகாஸ் குமார் தெரிவித்து உள்ளார்.

கவன ஈர்ப்புக்காகவும், சமூக வலைதளங்களில் பிரபலம் அடைவற்காகவும், பொது வெளியில் வினோதமான செயல்களில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, டில்லி மெட்ரோ ரயில்களில் இதுபோன்ற கவன ஈர்ப்பு செயல்களில் ஈடுபட்டு அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்வது அதிகரித்து வருகிறது.

சமீபத்தில், இளம் பெண் ஒருவர் கவர்ச்சியான மெல்லிய உடை அணிந்து, மெட்ரோவில் பயணித்தது சமூகவலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது.

அதேபோல சில இளம் ஜோடிகள் மெட்ரோ ரயிலில் மிக நெருக்கமாக இருந்த காட்சிகள், ‘இன்ஸ்டாகிராம்’ ஊடகத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

கவன ஈர்ப்புக்காக சிலர் செய்யும் இதுபோன்ற செயல்கள் டில்லி மெட்ரோ நிர்வாகத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி வருகிறது.

இது குறித்து டில்லி மெட்ரோ ரயில் கழக தலைவர் விகாஸ் குமார் கூறியதாவது:

மெட்ரோ ரயில் நிலைய வளாகம் முழுதும் பாதுகாப்பு பணியாளர்களை நாங்கள் நியமிக்க முடியாது. எனவே, இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய செயல்களில் ஈடுபடுவோர் குறித்து, பயணியர் புகார் அளிக்க முன்வரவேண்டும்.

அது போன்ற நபர்களை அழைத்து முதலில் அறிவுரை வழங்க முயற்சிப்போம். சமூக நலன் கருதி, இது பேன்ற செயல்களை பயணியர் தாங்களாகவே முன்வந்து தவிர்க்க வேண்டும்.

ரயில்களில், திடீர் சோதனைகள் மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பல்வேறு செயல்களை தடுத்து நிறுத்தியும் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.