வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: கிரிக்கெட் உலக கோப்பையை வென்று, ஆஸ்திரேலியா உலக சாம்பியன் ஆனது. அந்த அணியின் மிட்செல் மார்ஷ், உலக கோப்பையின் மீது கால் வைத்து மதிப்பளிக்காமல் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. அவரது செயலுக்கு பலரும் கண்டன கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனலில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆஸி., அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, 6வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை பெற்றது. அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸிடம் இந்திய பிரதமர் மோடி, உலக கோப்பையை வழங்கினார்.
பொதுவாக சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் இடம்பெற்ற வீரர்கள், கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். அந்த வகையில் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ், உலக கோப்பையை கீழே வைத்து, அதன் மீது கால் மேல் கால் போட்டு, தெனாவட்டாக அமர்ந்திருப்பது போல் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
கிரிக்கெட் விளையாடும் அணிகளுக்கு கனவாக இருக்கும் உலக கோப்பையை மதிக்காமல், கால் வைத்து அவமரியாதை செய்ததாக அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக கொண்ட ஆஸ்திரேலியா, அந்த விளையாட்டின் மூலம் பெரும் உயரிய கோப்பை மற்றும் பட்டத்தை பெற்றும், அதற்கு மதிப்பளிக்காமல் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement